உள்ளூர் செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை- அரசியல் பற்றி பேசியதாக பரபரப்பு பேட்டி

Published On 2022-08-08 08:13 GMT   |   Update On 2022-08-08 09:47 GMT
  • ரஜினிகாந்த் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
  • கவர்னரை சந்தித்து விட்டு வந்த ரஜினிகாந்தை பத்திரிகையாளர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் சந்திக்க விருப்பம் இல்லாமல் காரில் ஏறி சென்றார்.

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். கிண்டி ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடந்தது. காலை 11.30 மணிக்கு ரஜினி ராஜ்பவனுக்கு காரில் வந்தார்.

அவரை அங்குள்ள ஊழியர்கள் உள்ளே அழைத்து சென்றனர். கவர்னர் ரவி- ரஜினிகாந்த் சந்திப்பு 40 நிமிடங்கள் நடந்தது. 12.12 மணிக்கு ரஜினிகாந்த் வெளியே வந்தார்.

கவர்னரை சந்தித்து விட்டு வந்த ரஜினிகாந்தை அங்கு குவிந்து இருந்த பத்திரிகையாளர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் சந்திக்க விருப்பம் இல்லாமல் காரில் ஏறி சென்றார். அதன் பின்னர் அவர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

அப்போது நிருபர்கள் ரஜினிகாந்தை பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

நான் மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்தேன். நமது ஆன்மீக உணர்வு அவரை ஈர்த்து உள்ளது. தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார். முதலில் தமிழ், தமிழ் மக்களின் நேர்மை, கடின உழைப்பு அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக நான் என்ன செய்வதற்கும் தயாராக இருக்கிறேன் என்று கவர்னர் என்னிடம் கூறினார்.

கேள்வி:- பால், தயிர் போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தி இருக்கிறார்களே?

பதில்:- கருத்து சொல்ல விரும்பவில்லை.

கேள்வி:- அரசியல் தொடர்பாக பேசினீர்களா?

பதில்:- அரசியல் தொடர்பாக விவாதித்தோம் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா?

பதில்:- இல்லை

கேள்வி:- பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பேசினீர்களா?

பதில்:- அது தொடர்பாக உங்களிடம் பேச முடியாது.

கேள்வி:- ஜெயிலர் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

பதில்:- 15 அல்லது 22-ந்தேதி தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News