உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- டெல்லி வக்கீல்களை களம் இறக்கும் ஓ.பி.எஸ்.

Published On 2022-08-10 08:17 GMT   |   Update On 2022-08-10 08:17 GMT
  • டெல்லியில் இருந்து வக்கீல் குரு கிருஷ்ணகுமார் நேற்று இரவே சென்னை வந்தார். இரவு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பும் தயாராகி உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க.வில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் கடந்த மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என்னிடம் அனுமதி பெறவில்லை.

எனது அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே அந்த பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். வழக்கு போட்டார். இதே போல் வைரமுத்து என்ற பொதுக்குழு உறுப்பினரும் வழக்கு போட்டார்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கட்சியின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறி அந்த வழக்குகளை டிஸ்மிஸ் செய்தார்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். சுப்ரீம் கோர்ட்டும் அந்த வழக்கை விசாரிக்க மறுத்து ஐகோர்ட்டில் நிவாரணம் தேடிக்கொள்ளும்படி அறிவித்தது.

இதனால் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் ஐகோர்ட்டை நாடினார். மீண்டும் அந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்றிவிட்டு வேறு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. அதை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்றுக்கொண்டாலும் வழக்கை வேறுநீதிபதிக்கு மாற்றும்படி பரிந்துரை செய்தார். இதையடுத்து பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிதாக நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆஜராக டெல்லியில் இருந்து வழக்காட வக்கீல்கள் வர இருப்பதாக கூறினார். எனவே வழக்கு விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து வக்கீல் குரு கிருஷ்ணகுமார் நேற்று இரவே சென்னை வந்தார். இரவு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பும் தயாராகி உள்ளது. இது தொடர்பாக வக்கீல்களுடன் இரவில் நீண்டநேரம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News