உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி தடுப்பு வேட்டையில் களமிறங்கிய போலீசார் - தற்கொலை சம்பவங்கள் குறித்து அதிரடி விசாரணை

Published On 2022-06-11 06:26 GMT   |   Update On 2022-06-11 06:33 GMT
  • டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
  • சமீபத்தில் திருப்பூரில் ஒரு வழக்கு பதியப்பட்டது.

திருப்பூர்,

கடலூர், புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை போலீஸ்காரர் செல்வக்குமார் தற்கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதற்காக ஆப்பரேஷன் கந்து வட்டி என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. மாநகரம், மாவட்டம் வாரியாக உள்ள போலீஸ் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும், உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்கு, போலீஸ் நிலையங்களுக்கு கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் முழுமையாக விசாரிக்க துவங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கடன் பிரச்சினை தொடர்பாக நிகழும் தற்கொலை சம்பவத்தில், விரிவாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் அவிநாசியில் தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கையும் கூடுதல் கவனம் கொண்டு விசாரித்து வருகின்றனர்.டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

பனியன் தொழில் ரீதியாக அன்றாடம் ஓட்டல் கடை, காய்கறி மார்க்கெட் போன்ற பல வியாபாரங்களுக்கு, வட்டிக்கு பணம் வாங்குவது அதிகம். எனவே அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் விபரங்களை சேகரிக்க துவங்கியுள்ளனர். அவர்கள் மீது ஏதாவது புகார்கள் உள்ளதா என்பதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்களை அலட்சியம் கொள்ளாமல் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று மாநகர கமிஷனர் ஏ. ஜி.பாபு, எஸ்.பி., சசாங் சாய் ஆகியோர் உதவி கமிஷனர், டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சுதாகர் கூறுகையில், கந்து வட்டி தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்து வருகிறோம். சமீபத்தில் திருப்பூரில் ஒரு வழக்கு பதியப்பட்டது. ஈரோட்டில் கந்து வட்டி தொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் பயப்படாமல் போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News