உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

Published On 2022-06-06 08:22 GMT   |   Update On 2022-06-06 10:14 GMT
  • பள்ளி கல்வித்துறையின் உத்தரவால் 9-ம் வகுப்பு தேர்வை எழுதி உள்ள மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  • 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகு இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வகுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து 9-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள 9-ம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்கள் அனைவரையும் கணக்கில் எடுத்து அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலமாக தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

9-ம் வகுப்பு இறுதி தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் தேர்வை எப்படி எழுதி உள்ளனர் என்பதை ஆசிரியர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இறுதி தேர்வு மதிப்பெண்களையும் எக்காரணம் கொண்டும் கணக்கில் எடுக்கக்கூடாது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு மாணவர் அனைத்து தேர்வுகளையும் எழுதி இருந்தாலே போதும் என்பதை கருத்தில் கொண்டு தேர்ச்சி விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பல பள்ளிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இறுதி ஆண்டு தேர்வை சரியாக எழுதாத மாணவ-மாணவிகள் சிலர் பெயில் ஆகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களும், வெற்றி பெற்றவர்களாக இனி அறிவிக்கப்பட உள்ளனர். பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவால் 9-ம் வகுப்பு தேர்வை எழுதி உள்ள மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவால் 9-ம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வை சரியாக எழுதாத மாணவ-மாணவிகளும் பாஸ் ஆகி 10-ம் வகுப்புக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் பெற்றோர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாகவும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதாலும் பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News