தமிழ்நாடு

குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் மழை நீடிப்பு

Published On 2024-05-26 06:16 GMT   |   Update On 2024-05-26 06:18 GMT
  • மலையோர பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது.
  • 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் தெரியாத அளவுக்கு மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து மதகுகள் வழியாகவும் உபரி நீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், மழையின் காரணமாகவும் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு போன்றவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மலையோர பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மழை இல்லை. அதிகபட்சமாக குழித்துறையில் 45.7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. அதே நேரம் அணைகளின் நீர்மட்டம் குறையவில்லை. பேச்சிப்பாறை அணையில் 45.37 கன அடியாக நீர் மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1320 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரியாக 1536 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் 57.7 அடியும், சிற்றாறு-1 அணையில் 14.66 அடியும் சிற்றாறு-2 அணையில் 14.76 அடியும் நீர்மட்டம் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 11.5 அடியாக உள்ளது. இன்று காலையும் மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. நகர் பகுதிகளில் மழை இல்லா விட்டாலும் காலையில் இருந்தே வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டது. கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

குமரி மாவட்டத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News