தமிழ்நாடு

மத்திய அரசின் வரி விதிப்பால் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி

Published On 2024-05-26 05:49 GMT   |   Update On 2024-05-26 05:49 GMT
  • வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் மட்டுமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.
  • சின்ன வெங்காய விவசாயத்தில் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

பல்லடம்:

சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்க கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காய விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்க கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் மட்டுமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. சின்ன வெங்காயம் தென்னிந்தியாவில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கான தடையை அறிவித்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையான சரிவை சந்தித்தது. இந்த நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது. ஆனால் ஏற்றுமதிக்கு பெரிய வெங்காயத்திற்கு மட்டும் வரி விதிக்காமல் சின்ன வெங்காயத்திற்கும் சேர்த்து 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் சின்ன வெங்காய விலையும் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது.

தற்போது பெரும்பாலும் விற்பனைக்கு வரக்கூடிய சின்ன வெங்காயம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகள் நேரடியாக இருப்பு வைத்து விலை ஏறுகிற போது விற்பனை செய்கிற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த மாதத்தில் விலை ஏற்றம் இருக்கும் என பலரும் ஆயிரக்கணக்கான டன் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்திருந்தனர்.

ஆனால் அரசின் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.55 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதுவே 40 சதவீதம் வரி விதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சுமார் 20 ரூபாய் விலை ஏற்றம் இருந்திருக்கும். வரி விதிப்பால் அந்த விலையேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.மேலும் வெங்காயத்தை இருப்பு வைத்து விற்பனை செய்கிறபோது, அதில் 30 சதவீதம் கழிவுகள் ஏற்படும். மீதமுள்ள 70 சதவீதம் வெங்காயம் மட்டுமே விலைக்கு விற்க முடியும்.

ஆனால் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் அளவிற்கு கழிவுகள் ஏற்படும். மீதமுள்ள 50 சதவீதத்தில் மட்டுமே சாகுபடி செலவு மற்றும் இவ்வளவு நாள் இருப்பு வைத்ததற்கான பலனை காண முடியும். ஆனால் அது போன்ற ஒரு நிலை தற்போது இல்லை. 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காய விவசாயத்தில் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து சின்ன வெங்காயத்திற்கான வரி விதிப்பை நீக்க வேண்டும். மேலும் சின்ன வெங்காயத்திற்கும், பல்லாரி வெங்காயத்திற்கும், விலை முதல் விளைச்சல் வரை பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் மத்திய அரசு இரண்டையும் ஒரே நிலைப்பாட்டில் வைத்து வெங்காய ஏற்றுமதிக்கு ஒரே எண் வழங்கி உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News