உள்ளூர் செய்திகள்
பொன்.ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பழிவாங்கும் செயல்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2021-12-16 09:32 GMT   |   Update On 2021-12-16 10:38 GMT
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக கூடிய அளவிற்கு சூழல் உள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சைக்கு இன்று காலை வந்த பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க அரசு 100 நாட்களில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என விளம்பரம் செய்துள்ளது. ஆனால் சொன்னபடி எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாக கூடிய அளவிற்கு சூழல் உள்ளது. உடனடியாக போதை பொருள் விற்பனையை தடை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இதேபோல் லாட்டரி விற்பனையையும் தடுக்க வேண்டும்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் இதுவரை லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றதில் என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ரெய்டு நடத்துவது என்பது ஏதோ ஒரு காலத்தில் பயன்படுத்துவதற்காக அமைந்துள்ளது. அது தேர்தல் காலம் ஆகவோ அல்லது தேவைப்படும் காலமாகவோ இருக்க முடியும் என தி.மு.க அரசு காத்துக் கொண்டிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கைவிட்டுவிட வேண்டும். சேர்த்து வைத்துக்கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது கண்ணியமான செயல் அல்ல என்னை பொறுத்தவரை ரெய்டு நடத்துவது என்பதை பழிவாங்கும் செயலாகத்தான் பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News