தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் 70 ஆயிரம் பட்டுப்புடவைகள் தேக்கம்: கோ-ஆப் டெக்ஸ் கொள்முதல் செய்யுமா?

Published On 2024-05-10 08:34 GMT   |   Update On 2024-05-10 08:34 GMT
  • பட்டு ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டுச்சேலைகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது.
  • வழக்கமாக 2 அல்லது 3 ஆண்டுகளைக் கடந்த பட்டுச்சேலைகள் 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் உலகப்புகழ் பெற்றது. இங்குள்ள பட்டுச்சேலைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்கப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து பட்டுச்சேலைகளை வாங்கி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை குறைந்து உள்ளது. தற்போது, பட்டுச்சேலை விற்பனையில் தொடர்ந்து ஏற்படும் மந்தம் காரணமாக, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகின்றன. கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் விற்பனை குறைந்ததால் சுமார் ரூ.110 கோடி அளவிற்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுச்சேலைகள் தேக்கமடைந்துள்ளதாக கைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் ஆயிரக்கணக்கான பட்டுச்சேலைகள் விற்பனை ஆகாமல் குவிந்து கிடக்கின்றன.

பட்டு ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டுச்சேலைகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுவதால் அதன் விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை, மற்றும் போலி பட்டுகள் விற்பனையும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

மேலும் விற்பனை மந்தம் காரணமாக பட்டுச்சேலை உற்பத்தியும் காஞ்சிபுரத்தில் குறைக்கப்பட்டு உள்ளது. மூன்று சேலைகளை ஒரு மாதத்தில் நெய்ய வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் பணி வழங்கப்படுவதாக நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

வழக்கமாக 2 அல்லது 3 ஆண்டுகளைக் கடந்த பட்டுச்சேலைகள் 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். தற்போது அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், ஆயிரக்கணக்கான பட்டுச்சேலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளதால், அவற்றை தள்ளுபடியில் விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே கூட்டுறவு சங்கங்களில் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கும் பட்டுச்சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கைத்தறி சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து கைத்தறித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்து வருகிறது. அடிக்கடி பட்டுச்சேலை கண்காட்சி நடத்தி விற்பனை செய்கிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஊழியர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கும்போது, கைகளால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள், கைத்தறி பொருட்களை வாங்கி வழங்கும்படி தொழிற்சாலைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஜி விஸ்வநாதன் கூறும்போது, தங்கம், வெள்ளி விலைவாசி உயர்வின் காரணமாக பட்டுச்சேலை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் ஜரிகை விலை உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக ரூ.30 ஆயிரம் விற்க வேண்டிய ஒரு பட்டுச்சேலையின் விலை ரூ.50 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. மேலும் கடும் வெயில் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக பட்டுச்சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக காஞ்சிபுரத்தில் போலி பட்டு சங்கங்கள் அதிகமாக தொடங்கப்பட்டுள்ளன. அரசு சங்கங்கள் பெயர் பலகை போலவே போலி சங்கங்கள் பெயர் மற்றும் பட்டுச்சேலை கொடுப்பதற்காக அட்டைப்பெட்டி, பை ஆகியவை ஒரிஜினல் சங்கங்கள் போலவே தயாரித்து வாடிக்கையாளர்களை மிகப்பெரிய அளவில் ஏமாற்றுகிறார்கள்.

இதுகுறித்து அரசு பட்டு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் பலமுறை புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டுச்சேலைகள் தேக்கம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக புதிய சேலைகளை நெய்வதற்கு நெசவாளர்களுக்கு தொழில் சரிவர கொடுக்க முடியவில்லை. காரணம் ஏற்கனவே பல ரக சேலைகள் சொசைட்டிகளில் தேங்கியுள்ள காரணத்தினால் புதிதாக தொழில் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக நெசவாளர்கள் நெசவுத்தொழிலை விட்டுவிட்டு பல்வேறு வேலைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News