செய்திகள்
திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

திருத்துறைப்பூண்டியில் தொடர் மழை- சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து நெரிசல்

Published On 2021-01-14 04:49 GMT   |   Update On 2021-01-14 04:49 GMT
திருத்துறைப்பூண்டியில் தொடர் மழையால் சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகள் கடுமையான சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன இதனால் கார், பஸ், லாரி, மோட்டார் சைக்கிள்கள் உள்பட வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. மேலும் சாலைகளில் ஏற்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பது தெரியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சாலையோரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை சரி செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் திருத்துறைப்பூண்டி நகரில் நேற்று 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மழை தொடர்ந்து பெய்வதால் பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் சாலைகளில் இருபுறமும் தண்ணீர் வடிய கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தான் சாலைகள் சேதமடைந்ததாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் இருபுறமும் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வாய்க்கால்களை அமைத்து சாலைகள் சேதமடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News