தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

Published On 2024-04-28 04:17 GMT   |   Update On 2024-04-28 08:07 GMT
  • மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை .
  • அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு.

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் நாள்தோறும் சுட்டெரிக்கிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்துவதோடு மட்டுமல்லாமல் வெப்ப அலையும் வீசுகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே தலை காட்ட முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்த வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நாட்களில் வெப்ப அலை வீசுவதற்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசும். தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதற்கான 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.

மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதற்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம்

இதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழகத்துக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும். இந்த நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 டிகிரியும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 5 முதல் 8 டிகிரியும் வெப்பநிலை அதிகரிக்கும்.

மேலும், தமிழ்நாட்டில் 95 டிகிரி முதல் 107 டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 80 முதல் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி வெப்பநிலை பதிவாகிஉள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் வழக்கத்தை விட வெயில் வெளுத்தி வாங்கி வருகிறது. இந்த வெயிலின் காரணமாக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது மாநிலம் முழுவதும் சுருண்டு விழுந்து 9 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் வெயில் தாக்கத்தால் இறந்தார். இதனால் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழலில் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வெப்பச் சலனம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். பாலக்காட்டில் வெப்பநிலை 106 டிகிரியை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெப்ப அலையின்போது சூரிய ஓளி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மரணம் கூட ஏற்படலாம் என்பதால் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News