இந்தியா

வாக்குப்பதிவு குறைவுக்கு தேர்தல் ஆணையமே காரணம்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2024-04-28 04:33 GMT   |   Update On 2024-04-28 04:33 GMT
  • வாக்காளர்கள் டோக்கன் பெற்று வரிசையில் நின்று வாக்களித்து உள்ளனர்.
  • வாக்குப்பதிவு தாமதம் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

திருவனந்தபுரம்:

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2-வது கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 71.16 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த தேர்தலை விட குறைவு ஆகும். 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது 77.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு தேர்தல் ஆணையத்தின் மோசமான செயல்பாடே காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இது தொடர்பாக கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன் கூறுகையில், கேரளாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை. மாலை 6 மணிக்கு பிறகும் ஏராளமான வாக்காளர்கள் டோக்கன் பெற்று வரிசையில் நின்று வாக்களித்து உள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது காரணமாக 2 மணி நேரம் வரை சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாகி உள்ளது. ஆனால் இதற்கான கால நீட்டிப்பை அதிகாரிகள் வழங்க மறுத்துள்ளனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து தனி ஏஜென்சி அமைத்து விசாரிக்க வேண்டும் என்றார். இதேபோல் வேறு சில கட்சிகளும் குற்றம்சாட்டி உள்ளன. வாக்குப்பதிவு தாமதம் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தேர்தல் செயல்முறை சுமூகமாக நடந்துள்ளது. கடந்த தேர்தலை விட இந்த முறை மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. வடகரா உள்ளிட்ட சில தொகுதிகளின் வாக்குச்சாவடிகள் சிலவற்றில் இரவு 8 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வந்ததால் தான் இந்த தாமதம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் போஸ்டர் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த முகமது ஷாஜி (வயது 51) என்பவர் தான் இந்தச் செயலில் ஈடுபட்டவர் என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News