இந்தியா

"மீண்டும்" பா.ஜ.க. என்ற நம்பிக்கையில் மோடி: முதல் 100 நாள் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு

Published On 2024-05-11 10:54 IST   |   Update On 2024-05-11 10:54:00 IST
  • தேர்தல் அறிக்கையில் சொன்ன முக்கிய அறிவிப்புகளை முதல் 100 நாட்களில் நிறைவேற்ற காட்ட வேண்டும் என்பதில் பிரதமர் முனைப்புடன் உள்ளார்..
  • ஏ வகை பிரிவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கொள்கை அறிவிப்புகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

பாராளுமன்றத் தேர்தலில் பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறோம். இன்னும் மீதி கிணறு தாண்ட வேண்டியிருக்கிறது. அதற்குள் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பதில் விறுவிறுப்பான எதிர்பார்ப்புகள் ஏற்பட தொடங்கி இருக்கின்றன.

3-வது கட்டத்தேர்தல் பிரசாரத்தில் இருந்து வட மாநிலங்களில் மாற்றங்கள் வந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியானபடி உள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் 400 தொகுதிகள் கிடைக்காது என்று பெரும்பாலானவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். 

என்றாலும் பிரதமர் மோடி இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் 3-வது முறையாக நிச்சயம் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஜூன் 4-ந் தேதி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதல் 100 நாட்களில் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் திட்டமிடத் தொடங்கியிருக்கிறார்.

குறிப்பாக முதல் 100 நாட்களில் பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி பிரதமர் மோடி நினைத்து இருக்கிறார். தேர்தல் அறிக்கையில் சொன்னதை 50 முதல் 70 முக்கிய அறிவிப்புகளை முதல் 100 நாட்களில் நிறைவேற்ற காட்ட வேண்டும் என்பதில் அவர் முனைப்புடன் உள்ளார்.

இதற்காக முதல் 100 நாள் திட்டம் என்ற தலைப்பில் மத்திய அரசின் 10 துறை செயலாளர்கள் ஒருங்கிணைந்து திட்டங்களை தயாரித்து வருகிறார்கள். அவர்கள் அந்த திட்ட அறிவிப்புகளை ஏ, பி, சி என்று 3 வகையாக பிரித்து பட்டியலிட்டுள்ளனர்.

ஏ வகை பிரிவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கொள்கை அறிவிப்புகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

பி வகை பிரிவில் மத்திய மந்திரிகள் மூலம் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று உள்ளன. இதில் முக்கியமான மந்திரிகளின் கொள்கை அறிவிப்புகள் இடம் பெறும்.

சி வகை பிரிவில் சற்று நீண்டகால திட்டங்களுக்கான அறிவிப்புகள் இருக் கும். இந்த 3 வகை திட்ட அறிவிப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் முக்கியத்துறை அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News