இது வெறும் ஆரம்பம் தான்.. எரிபொருட்கள் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் - மக்களவையில் ராகுல் எச்சரிக்கை | Rahul Gandhi
- மிகப்பெரிய பிரச்சனையாக மாறப்போகின்றன.
- தவறான வெளியுறவுக் கொள்கைகள் காரணமாகவே இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு சமரசம்
மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால் நாடு விரைவில் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
இன்று பட்ஜெட் கூட்டத்தின்போது மக்களவையில் பேசிய அவர், "நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்கனவே தொடங்கிவிட்டது, இது ஒரு ஆரம்பம் மட்டுமே. வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர எரிபொருட்கள் மிகப்பெரிய பிரச்சனையாக மாறப்போகின்றன.
அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் காரணமாகவே இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது" என்று எச்சரித்தார்.
மேலும், எல்பிஜி தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் பேச தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், "நான் எதைப் பேச வேண்டும் என்பதை அமைச்சரே தீர்மானிக்கும் புதிய நடைமுறை ஆச்சரியமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும், "உலகம் ஒரு நிலையற்ற காலக்கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்
பிரதமர் மோடியும் மத்திய அரசும் உடனடியாக விழித்துக்கொண்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்" என்று எச்சரித்தார்.
இதற்கிடையே இந்தியாவில் எரிபொருள், எண்ணெய் தட்டுப்பாடு இல்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி மக்களவையில் விளக்கமளித்தார்.