null
'சிலர் நாடாளுமன்றத்தைவிட எதிர்க்கட்சித் தலைவர் உயர்ந்தவர் என நினைக்கின்றனர்' - ராகுல் காந்தியை சாடிய ஓம் பிர்லா
- பிரதமரோ அல்லது அமைச்சராகவோ இருந்தால்கூட சபையில் உரையாற்றுவதற்கு முன்பு அவை விதிகளின் கீழ் முன்னறிவிப்பு அளிக்க வேண்டும்.
- சபாநாயகர் இருக்கையில் மைக்ரோஃபோன்களை ஆன் செய்யவோ அல்லது ஆஃப் செய்யவோ எந்தப் பொத்தானும் இருப்பதில்லை.
நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று மக்களவையில் பேசிய ஓம் பிர்லா, தனது நடவடிக்கைகள் பாரபட்சமற்றவை என்று வலியுறுத்தினார். மக்களவையில் உறுப்பினர்கள் முன் பேசிய ஓம் பிர்லா,
"எதிர்க்கட்சித் தலைவர் இந்த சபையைவிட மேலானவர் என்றும், அவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சிலர் நினைக்கின்றனர். அப்படி எந்த சலுகையும் இங்கு கிடையாது. சபை அதற்கென வகுக்கப்பட்ட விதிகளின்படியே இயங்குகிறது. ஏன் பிரதமரோ அல்லது அமைச்சராகவோ இருந்தால்கூட சபையில் உரையாற்றுவதற்கு முன்பு அவை விதிகளின் கீழ் முன்னறிவிப்பு அளிக்க வேண்டும்.
சபாநாயகர் இருக்கையில் மைக்ரோஃபோன்களை ஆன் செய்யவோ அல்லது ஆஃப் செய்யவோ எந்தப் பொத்தானும் (Button) இருப்பதில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவராகச் செயல்படும்போது, அவர்களும் இந்த உண்மையை முழுமையாக அறிவார்கள். பேச அனுமதிக்கப்பட்ட உறுப்பினருக்கு மட்டுமே மைக்ரோஃபோன் இயக்கப்படும். அந்த உறுப்பினரின் மைக்ரோஃபோன் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மூன்றாவது முறையாக, மக்களவை நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதித்தது. சபையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதை உறுதி செய்ய நான் எப்போதும் பாடுபட்டு வருகிறேன்" என தெரிவித்தார்.
ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. சுமார் 10 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, 118 எம்.பி.க்களின் ஆதரவை மட்டுமே பெற்ற இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் தோல்வியடைந்தது.