இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. LPG தட்டுப்பாடால் Internet சேவை பாதிக்க வாய்ப்பு
- இந்தியாவில் LPG கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- எல்பிஜி கியாஸ் தட்டுப்பாடு நீடித்தால் மொபைல் நெட்வொர்க், இணைய சேவைகள் பாதிக்கப்படலாம்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதனால் இந்தியாவில் LPG கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எல்பிஜி கியாஸ் தட்டுப்பாடு நீடித்தால் மொபைல் நெட்வொர்க், இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக மொபைல் நெட்வொர்க் டவர்களும், இணைய சேவைகளும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்குகின்றன. மின்சாரம் தடைப்பட்டால், அவற்றை செயல்பாட்டில் வைத்திருக்க ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஜெனரேட்டர்களுக்கு பொதுவாக டீசல் அல்லது LPG போன்ற எரிபொருட்கள் பயன்படுத்தப்படலாம். அதனால், எரிபொருள் விநியோகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால், சில இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
உடனடி பாதிப்பு இருக்குமா?
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் உடனடியாக பாதிக்கப்படும் என்ற தகவல் இல்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக மாற்று எரிபொருள் கையிருப்பு வைத்திருக்கும். முக்கியமான நெட்வொர்க் மையங்களில் பேட்டரி பேக்கப் மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் உள்ளன. இதனால் குறுகிய காலத்தில் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவாக உள்ளது.
LPG பற்றாக்குறை குறித்து உலகளவில் கவலை இருந்தாலும், இந்தியாவில் உடனடி அளவில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை. இருப்பினும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் நீண்டகால பிரச்சினைகள் ஏற்பட்டால் அதன் தாக்கம் பிற துறைகளுடன் சேர்ந்து தொலைத்தொடர்பு துறையையும் பாதிக்கக்கூடும்.