செய்திகள்
ஸ்டாலின்

சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து சட்டமசோதா கொண்டு வர வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2020-02-19 10:19 GMT   |   Update On 2020-02-19 10:19 GMT
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கடந்த 9-ந் தேதி அறிவித்தார். அந்த நேரத்தில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அந்த திட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 10.2.2020 அன்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எழுதிய கடிதத்திலும் குறிப்பிடப்படவில்லை.

எனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்தால் தான் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு சிறப்பாக இருக்க முடியும்.

இதுபற்றி தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அதற்கு சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி பதில் எதுவும் சொல்ல வில்லை. அதுமட்டுமல்ல முதல்-அமைச்சரும், இதுவரை அது குறித்து தெளிவுபடுத்தவில்லை.


ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து இனிமேல் அது தொடர்பாக புதிய திட்டங்கள் வராத வகையில் ஒரு சட்ட முன்வடிவை இதுவரை ஏன் கொண்டு வராமல் இருக்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.

எனவே மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் 16.1.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு தேவையில்லை என்று கூறியுள்ளது. அதை விலக்கி கொள்ளுமாறு நீங்கள் வலியுறுத்தி இருக்கிறீர்கள்.

அமைச்சர் ஜெயக்குமார் 10.2.2020 அன்று ஒரு கடிதத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து இருக்கிறார். நான் கேட்க விரும்புவது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட முன்வடிவை சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அதை கொண்டு வரும் போது தி.மு.க. அதற்கு முழு ஆதரவு தர தயாராக உள்ளது. பாராளுமன்றத்திலும் தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி பேசுவார்கள். இன்று மாலை அமைச்சரவை கூடுவதாக செய்தியை பார்த்தேன். எனவே இதில் நல்ல முடிவு வரும் என்ற அடிப்படையில் கேட்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News