செய்திகள்
கனிமொழி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்- கனிமொழி எம்.பி.

Published On 2020-01-11 05:04 GMT   |   Update On 2020-01-11 05:04 GMT
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

நெல்லை:

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கருத்தரங்கம் நெல்லையில் நடந்தது. இதில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூறியதாவது:-

பாரதிய ஜனதா ஆட்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை நள்ளிரவில் பாராளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றி, உடனே ஜனாதிபதி ஒப்புதலை பெற்று உள்ளனர். ஏன் இந்த சட்டத்தை இரவோடு, இரவாக நிறைவேற்றவேண்டும். அதற்கு என்ன அவசியம் உள்ளது. நாடு பொருளாதார சரிவில் உள்ளது. வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து உள்ளது. இதை மறைப்பதற்காக இந்த சட்டத்தை கொண்டு வந்து மக்களை போராட வைத்து உள்ளனர்.

இந்த சட்டத்தை தமிழக அரசு ஆதரித்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. பாரதிய ஜனதா அரசுக்கு சிறப்பாக சேவை செய்யக்கூடிய அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது. தமிழகத்தின் உரிமைகளை மோடியின் காலடியில் வைக்கக்கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. இதை மக்கள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த அரசு கூறுகிறது. இந்தியாவில் இரட்டை குடியுரிமைக்கு சாத்தியம் கிடையாது என்பதை அறியாமல் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் தங்களுடைய உரிமைக்காக யாரும் போராட முடியாத நிலை உள்ளது. அந்த அளவிற்கு இந்த அரசு மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது.

மக்கள் இவ்வளவு போராட்டம் நடத்திய பிறகும் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறமாட்டோம் என்று கூறி உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து 60 பேர் கோர்ட்டுக்கு சென்று உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். அப்போது தான் விடிவுகிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News