செய்திகள்
நெல்லை கண்ணன்

பிரதமரை அவதூறாக பேசிய வழக்கு - பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது

Published On 2020-01-01 16:07 GMT   |   Update On 2020-01-01 16:07 GMT
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய புகார் தொடர்பாக பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து அவர்மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லை கண்ணன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே,  நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினா கடற்கரையில் பா.ஜ.க.வினர் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News