உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம்: பிடிபட்ட சிறுத்தை முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது

Published On 2024-05-26 08:23 GMT   |   Update On 2024-05-26 08:23 GMT
  • வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து பதுங்கி இருந்தது.
  • சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கொரவயல் பகுதியில் சின்னம்மா என்பவரது காபி தோட்டத்துக்குள் வீடு ஒன்று உள்ளது.

விவசாய நிலத்தில் உள்ள இந்த வீட்டை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்தனர். நேற்று மதியம் அங்கு பணியாற்றும் இடும்பன் என்ற தொழிலாளி வீட்டுக்குள் சென்றார். வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து பதுங்கி இருந்தது. அதனை கண்டு இடும்பன் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் சிறுத்தை வெளியே வராமல் இருக்க கதவை பூட்டி விட்டு வெளியே ஓடி வந்தார். சக தொழிலாளர்களிடமும் தகவலை தெரிவித்து அவர்களை உஷார்படுத்தினார்.

இதுதொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். பாதுகாப்பு உடைகள் அணிந்த வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டுக்குள் இருந்த சிறுத்தை வெளியே வர முடியாததால் ஆத்திரத்தில் உள்ளே கிடந்த இருக்கை உள்ளிட்ட பொருட்களை கடித்து குதறி நாசம் செய்தது.

தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இரவு 7.45 மணிக்கு சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதனால் சிறுத்தை மயக்கம் அடை ந்தது. உடனடியாக கதவை திறந்து கொண்டு வனத்துறையினர் வீட்டுக்குள் சென்றனர்.

சிறுத்தையை மீட்டு அவர்கள் வனத்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். நள்ளிரவில் சிறுத்தைக்கு மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு போய் சிறுத்தையை வனத்துறையினர் விடுவித்தனர்.

வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியே சென்ற சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வனத்துறையினர் போராடி அந்த சிறுத்தையை பிடித்துள்ளனர். அதன்பிறகே அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News