செய்திகள்
ராமதாஸ்

1757 ஆசிரியர்கள் வேலையில் நீடிக்க அரசு உறுதி அளிக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2019-12-21 09:52 GMT   |   Update On 2019-12-21 09:52 GMT
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1757 ஆசிரியர்கள் வேலையில் நீடிக்க அரசு உறுதி அளிக்கவேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1757 பேரின் விவரங்களை சேகரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு ஆசிரியர்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1757 ஆசிரியர்களும் எந்த மாவட்டத்தில், எந்த பள்ளியில் பணியாற்றுகின்றன என்பது உள்ளிட்ட விவரங்கள் கடந்த சில நாட்களாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதேநேரத்தில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய இடைக்காலத் தடை விதித்திருப்பதுடன், அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர்.

அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. அதனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்க முடியாது. மற்றொருபுறம், இப்போது எந்தத் தேவையும் இல்லாமல் இத்தகைய கணக்கெடுப்பை தமிழக அரசு எடுப்பது ஏன்? என்ற வினாவும் எழுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 8 ஆண்டுகளில் 16 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 5 முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டதும் 1757 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாததற்கு காரணம் ஆகும்.

இதைக் கருத்தில் கொண்டு வேறு வகையில் அவர்களின் கற்பித்தல் திறனை மதிப்பீடு செய்து 1757 ஆசிரியர்களும் பணியில் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News