தமிழ்நாடு

தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெற 2¼ கிலோ நகைகளை அணிந்து வந்த தொழில் அதிபர்

Published On 2024-04-27 03:56 GMT   |   Update On 2024-04-27 03:56 GMT
  • ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
  • தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார்.

விழுப்புரம்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிவமொக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ரெஜிமோன்(வயது 53) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர்.

பணத்தை பெறுவதற்காக வந்த ரெஜின்மோன் தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்ததால் அவரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோன் கூறும்போது, கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியை சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் காரில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். 

Tags:    

Similar News