இந்தியா

குக்கிராமத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு

Published On 2024-04-27 04:00 GMT   |   Update On 2024-04-27 04:00 GMT
  • காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடி விவசாயிகள் வசித்து வருகிறார்கள்.
  • கிராமத்தில், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

மங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்கன்னட பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பெல்தங்கடி வட்டத்தின், பஞ்சருமலே குக்கிராமத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தக் கிராம வாக்குச்சாவடியில் மொத்தம் 111 வாக்குகள் உள்ளன. வாக்காளர்கள் அனைவரும் வருகை தந்து வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே 111 பேரும் வாக்களித்துவிட்டனர்.

காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பழங்குடி விவசாயிகள் வசித்து வருகிறார்கள். இந்தக் கிராமத்தில் மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாவிட்டாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பொழியும் நீரில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். காட்டில் 8 கி.மீ. நடந்து வந்து முடிகெரே நகரில் பஸ்சைப் பிடித்து, தாலுகா அலுவலகம் அமைந்திருக்கும் பெல்தங்கடிக்கு வரும் நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.

இத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும், அனைவரும் தவறாமல் வாக்களித்ததற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்னி மலேகுடியா கூறுகையில், 'நகரங்களில் செய்யப்படும் வசதிகள் கிராமங்களில் செய்ய முடியாது என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக வாக்களிக்கும் எண்ணத்தில் மாற்றம் ஏற்படவில்லை. ஒருவேளை 500 வாக்காளர்கள் இருந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் வாக்களித்திருப்பார்கள்" என்றார். இந்தக் கிராமத்தில், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

Tags:    

Similar News