செய்திகள்
யானை

கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் யானைகள் மீண்டும் அட்டகாசம்

Published On 2019-12-06 05:21 GMT   |   Update On 2019-12-06 05:21 GMT
கொடைக்கானல் கீழ் மலை பகுதியில் மீண்டும் புகுந்த காட்டு யானைகள் வாழை, காபி பயிர்களை சேதப்படுத்தியது.

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, பெரியூர், குப்பம்மாள்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வாழை, காபி உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். இதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மண்ட கால்வாய் பகுதியில் திடீரென 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. அங்கிருந்த வாழை மற்றும் காபி பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.

யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கன்னிவாடி வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாகவே அங்கு முகாமிட்டுள்ளனர். ஆனாலும் யானைகள் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு இடையில் விவசாயத்தை தொடர்ந்து வரும் அவர்களுக்கு இது மற்றும் ஒரு இடியாக உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை மிதித்து பெண் பலியானார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் யானைகள் நிரந்தரமாக விரட்டுவது குறித்து மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதன் காரணமாக யானைகளால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உயிர் பலி அதிகரித்து வருகிறது. பயிர்களை சேதப்படுத்துவதால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கிறோம். எனவே அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News