செய்திகள்
வழக்கு

கடலாடி அருகே விசாரணைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் - 20 பேர் மீது வழக்கு

Published On 2019-08-31 05:48 GMT   |   Update On 2019-08-31 05:48 GMT
இரு கிராம பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பதட்டம் உருவானது. இது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ளது ஆப்பனூர் மற்றும் ஆ.புனவாசல் கிராமங்கள். இந்த கிராமங்கள் சேர்ந்த சிலர் அணியாக, முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்றனர். அப்போது 2 அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த முன் விரோதம் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இரு கிராம மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் ஆ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஆப்பனூர் கிராம மாணவர்களை தாக்கி உள்ளனர்.

இந்த பிரச்சினை மேலும் சூடுபிடித்து, கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு நின்ற ஆ.புனவாசல் கிராமத்தினரை ஆப்பனூரைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். அடுத்தடுத்து நடந்த மோதல்கள் தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்த கடலாடி போலீசார் ஆப்பனூர் கிராமத்திற்குச் சென்றனர். அவர்கள் சிலரை விசாரணைக்காக அழைத்தனர். இதற்கு கிராம பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் போலீசாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பிரச்சினைக்குரிய கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News