செய்திகள்

மதுரையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - அதிமுக பிரமுகர் கைது

Published On 2019-04-14 10:07 GMT   |   Update On 2019-04-14 10:07 GMT
மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த வாக்காளர் பட்டியல், ரூ.7,610 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
மதுரை:

பாராளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க மதுரை பாராளுமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினரின் கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 81-ம் வார்டு செயலாளர் கோபிநாத் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கீழ அண்ணா தோப்பு பகுதியில் மர்ம நபர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்துக் கொண்டு இருந்தார். கோபிநாத் அவரை கையும், களவுமாக பிடித்து திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில், அவர் கீழ அண்ணாத்தோப்பைச் சேர்ந்த எம்.என்.பத்மநாபன் என்பதும், அ.தி.மு.க. பிரமுகராக இருப்பதும் தெரியவந்தது.

அவரிடம் இருந்த வாக்காளர் பட்டியல், ரூ.7,610 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து திலகர்திடல் போலீசார் பத்மநாபனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை நாராயணபுரம் பாங்க் காலனியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 21 பேர் வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று பணம் வழங்குவதாக புகார் வந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் பேட்ரிக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் பிடிபட்டனர். அதிகாரிகளின் விசாரணையில், அவர்கள் தல்லா குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ், அர்ஜூன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தல்லா குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019

Tags:    

Similar News