செய்திகள்

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்- துரைமுருகன்

Published On 2019-03-30 05:22 GMT   |   Update On 2019-03-30 05:42 GMT
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது குறித்து துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். #Duraimurugan #DMK #Raid
வேலூர் :

வேலூர் காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்த வந்தனர். வருமானவரித் துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள் முரண்பட்டுப் பேசியதால், தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். அதன்பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனையை தொடங்கினர்.  வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தினர். மேலும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு  சொந்தமான பி.இ. கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளியிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை குறித்து  துரைமுருகன் கூறியதாவது:



திடீரென நள்ளிரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றனர். விவரங்களை கேட்டோம். பிறகு தவறாக வந்து விட்டோம் என கூறினர். சிறிது நேரம் கழித்து யாருடனோ செல்போனில் பேசி விட்டு மீண்டும் வந்தனர், நாங்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் என கூறினர். யார், என்ன என்பது குறித்து தெரியாமல் உள்ளே விட மறுத்தோம். பின்னர் உள்ளே வந்து சோதனை நடத்தினர். எதுவும் சிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இது போன்று செயல்களில் அரசு ஈடுபடுவது முறையானதல்ல.

நாங்கள் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனம் நடத்தவில்லை. சாதாரண கல்லூரி தான் வைத்துள்ளோம். ஆனால் வேலூரில் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களை திசை திருப்பவே ஆளும்கட்சி இவ்வாறு செய்துள்ளது.  இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எங்களுக்கு மன உளைச்சல் தரவும், களத்திலே நேருக்கு நேராக நின்று எதிர்க்க பலமின்றியும் இவ்வாறு செய்கின்றனர். மிரட்டுவது, பொய் கூறுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்து ‘மோடி ஜே’ என கூறிவிடுவோம் என எண்ணுகின்றனர். அவ்வாறு ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Duraimurugan #DMK #Raid
Tags:    

Similar News