இந்தியா

இந்தியா வளர்ச்சியடைந்து வலுவாக இருக்க வேண்டும்- அக்ஷய் குமார்

Published On 2024-05-20 03:16 GMT   |   Update On 2024-05-20 04:03 GMT
  • வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.
  • பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து மை வைத்த விரலை காண்பித்தார்.

புதுடெல்லி:

543 உறுப்பினர்களை கொண்ட இந்திய பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.

உலகமே எதிர்பார்க்கும் இந்த தேர்தலில் முதல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதன் மூலம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வான குஜராத்தின் சூரத் தொகுதியும் அடங்கும்.

இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களின் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்து விட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்கள் முக்கியமானவை ஆகும்.

4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 5-வது கட்டமாக 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

அந்தவகையில் உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மகாராஷ்டிரா (13), மேற்கு வங்காளம் (7), பீகார் (5), ஒடிசா (5), ஜார்கண்ட் (3), ஜம்மு-காஷ்மீர் (1), லடாக் (1) ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடக்கிறது.

வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.

ஏற்கனவே நடந்த 4 கட்ட தேர்தல்களில் மொத்தம் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அடுத்தடுத்த கட்டங்களில் வாக்கு சதவீதத்தை மேலும் அதிரிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி இன்றைய தேர்தலுக்காக வாக்காளர்களிடம் தீவிர விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்க வருமாறு தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின் அவர் விரலில் உள்ள மை அடையாளத்தை காட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எனது இந்தியா வளர்ச்சியடைந்து வலுவாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து வாக்களித்தேன். இந்தியாவிற்கு எது சரி என்று நினைத்து அதற்கு வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் சதவீதம் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

தொழிலதிபர் அனில் அம்பானி மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்குப்பதிவு தொடங்கும் வரை காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது குடும்பத்துடன் வந்து மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து மை வைத்த விரலை காண்பித்தார்.

Tags:    

Similar News