செய்திகள்

அதிமுக வெற்றி பெற்று விடும் என்பதால் முக ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார்- தம்பிதுரை

Published On 2019-02-18 05:33 GMT   |   Update On 2019-02-18 05:33 GMT
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்பதால் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துவதாக தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #ThambiDurai #DMK MKStalin
கரூர்:

கரூர் மாவட்டம் பவித்திரம் பகுதியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவிற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உலகிலேயே சிறந்தது இந்திய உளவுத்துறையும், தமிழக உளவுத்துறையும் தான். காஷ்மீர் சம்பவத்தில் உளவுத்துறைக்கு களங்கம் கற்பிப்பது சரியாக இருக்காது.

தவறு நடந்திருந்தாலும் பயங்கரவாதிகள் 350 கிலோ வெடிமருந்துகள் கொண்டு வந்ததை கண்டுபிடித்து கூறியது உளவுத்துறைதான். 2012-ம் ஆண்டு நீட் தேர்வை ஒரு மாநிலத்தில் நடத்தி காட்டியது காங்கிரஸ்தான். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததும் காங்கிரஸ் தான்.

இலங்கை 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க.-காங்கிரஸ்தான். மேலும் காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தி.மு.க.தான் காரணம்.

காங்கிரஸ் ஆட்சியின் போது மு.க.அழகிரி மத்திய மந்திரியாக இருந்தது மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்காததால் இலங்கை பிரச்சனையை காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது. அதன் பிறகு 2014-ல் தனித்து போட்டியிட்ட தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

கோப்புப்படம்

தி.மு.க.வுக்கு எந்த கொள்கையும் கிடையாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட இயக்கம். அண்ணாவுக்கு பின்னர் தி.மு.க.வை மக்கள் இயக்கமாக மாற்ற மு.க.ஸ்டாலினால் முடியவில்லை. இப்போது போர்வையை விரித்துக் கொண்டு கிராம சபை கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

அ.தி.மு.க. வலிமையான இயக்கம். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விடும் என்பதால் இப்போது மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்திக்கொண்டு இருக்கிறார். பேசுவதற்கு எதுவும் இல்லாததால் அ.தி.மு.க. குறித்து அவர் விமர்சனம் செய்கிறார். வருகிற தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியாது. எப்போதும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டால் பலன் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தம்பிதுரை எம்.பி., கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க.வில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. இதனால் அதுபற்றி நான் கருத்து கூற முடியாது என்றார். #ADMK #ThambiDurai #DMK MKStalin
Tags:    

Similar News