செய்திகள்
திண்டுக்கல்லில் அதிமுக. சார்பில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது எடுத்த படம்.

திமுகவுக்கு தலைமை தாங்கும் தகுதி முக ஸ்டாலினுக்கு இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2019-02-18 03:48 GMT   |   Update On 2019-02-18 03:48 GMT
தி.மு.க.வுக்கு தலைமை தாங்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். #DindigulSrinivasan #MkStalin
திண்டுக்கல் :

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க. அரசின் சாதனை மற்றும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.டி.ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் கண்ணன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் உள்பட பலர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதியோர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் 5 முறை ஆட்சி நடந்த போது கட்சிக்கு வேண்டியவர்கள், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்களுக்கே அதிக அளவில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபை கூட்டங்களில் அ.தி.மு.க. ஆதாரத்துடன் அறிவித்து தி.மு.க.வினரின் முகத்திரையை கிழித்துள்ளது.

எனவே அவரை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக முதலீட்டாளர்கள் மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2-வது முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. எனவே பாடுபடுபவர்கள் யார், பாசாங்கு செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது கூறியதாவது:-

தமிழக மக்கள் மனதில் கடந்த 40 ஆண்டுகளாக அ.தி.மு.க. நீங்காத இடம்பிடித்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் நாட்களை அதன் நிர்வாகிகள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை என தி.மு.க.வினரே புலம்பி வருகின்றனர். எனவே ‘தி.மு.க.வுக்கு தலைமை தாங்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை’.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததே கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடக்காததற்கு காரணம் என மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தேர்தலை நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்ததே தி.மு.க. தான். அதேபோல் திருவாரூர் இடைத்தேர்தலுக்கும் ‘கஜா’ புயலை காரணம் காட்டி தடை கேட்கிறார். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொலை குற்றவாளி என காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுக்கிறார். ஆனால் அது நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் திருமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #DindigulSrinivasan #MkStalin
Tags:    

Similar News