search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIADMK"

    • சவுக்கு சங்கர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்
    • நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்

    சவுக்கு சங்கர் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

    சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், "சவுக்கு சங்கரை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார், இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்துள்ளார்

    எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

    மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

    சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

    எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.
    • தமிழகத்தில் 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

    வாக்குப் பதிவின் போது மக்கள் எந்த அளவுக்கு வாக்களித்தனர் என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. எனினும், வாக்களித்த விவரம் தோராயமாக வெளியிடப்பட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 81.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம் முழுக்க மொத்தமாக 4 கோடியே 33 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

    இதில் 2 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள் என்பதும், 2 கோடியே 21 லட்சம் வாக்காளர்கள் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

    • ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்
    • "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்

    மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துக்களை தேரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்தும் கொள்கிறேன்.

    ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இந்த நிலையில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் அ.தி.மு.க.வினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    கள்ள ஓட்டு போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை சீல் வைக்கப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

    • மக்களைப் பிரித்தாலும் சூழ்ச்சி செய்யும் கட்சி வடக்கிலிருந்து வந்த பாஜக
    • அதிமுக என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை பாஜக உணர வேண்டும்

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில்,

    "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று சட்டமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்தாரே நம் அன்புத் தாய், அந்தத் தாயின் சபதத்தை நிறைவேற்ற 'நான் உழைப்பேன், உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்' என்று சபதம் எடுத்துக்கொண்டு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் இலட்சிய உணர்வோடு உழைத்து வருகிறீர்கள்.

    கழக உடன்பிறப்புகளே, உங்கள் நம்பிக்கைகள் எதுவும் வீணாகாது. உங்களுக்காக இங்கே ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாடாளுமன்ற மக்களவையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலத்தைப் போலவே, மிகப் பெரிய கட்சியாக நாம் அமர்ந்திட உங்கள் உழைப்பும், கவனமும் இந்த பிரசாரத்தின் கடைசி நாட்களில் தேவைப்படுகின்றன.

    ஏராளமான ஊழல் பணத்துடனும், தேர்தல் நிதியாகத் திரட்டிய பெரும் பண மூட்டையுடனும் தீய சக்தியான திமுக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது.

    நமது இயக்கத்தை பிளவுபடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம். வன்முறை வெறியாட்டங்களையும், வடக்கே இருந்து ஏவப்படும் விஷ அம்புகளையும், ஆளும் கட்சிக்கு இருக்கும் அதிகார மமதையில் நடத்தப்படும் அருவருக்கத்தக்க ஏற்பாடுகளையும், 1972-ல் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்? இத்தகைய கோழைத் தனங்களைத் தாண்டிதானே எண்ணற்ற வெற்றிகளை நாம் பெற்று வருகிறோம்?

    நாம் வம்பு சண்டைக்குப் போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள். ஆனால், நமது அமைதியும், சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே. அதிமுக என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை, நம்மை சீண்டிப் பார்க்கும் இந்த சிற்றறிவு மனிதர்கள் உணர்ந்துகொள்ளட்டும்.

    இந்த தேர்தலில் நமது அர்ப்பணிப்பும், உழைப்பும், ஈடுபாடும் பல மடங்கு இருக்க வேண்டும். துவளாமல், அஞ்சாமல், அயராமல் 'வெற்றி ஒன்றே' நம் இலக்காகக் கொண்டு தேர்தல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

    வெற்றி நமதே! 40-ம் நமதே. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று அவர் எழுதியுள்ளார்.

    • அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்
    • மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

    கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "ஒரு திரைப்படத்தில் வடிவேல், 'நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்' என கத்துவது போல, நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி கொண்டு உள்ளது.

    திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம், அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு, ஆட்டுக்குட்டி எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம், ஆனால் இந்த தேர்தலுக்கு பின் கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி.

    அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இதை நான் சொல்லவில்லை பாஜகவின் மத்திய நிதியமைச்சர் ஆன நிர்மலா சீதாராமன் கணவரே சொல்லியிருக்கிறார்.

    மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி கூறினால் எடப்பாடியும் ரோட் ஷோ நடத்துங்கள் என்று கூறுகிறார்கள். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்றால் குரங்கு தான் வித்தை காட்ட முடியும். எங்கள் தலைவர் சிங்கம் மாதிரி இருப்பதால் தலைவர் இருக்கும் இடத்திற்கே கூட்டம் தேடி வரும். ஆனால் பாஜகவினர் கூட்டம் இருக்கும் இடத்தை பார்த்து தேடிப்போய் கூட்டம் நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும்.

    மண்ணச்சநல்லூர்:

    நடிகர் கஞ்சாகருப்பு தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அம்மனுக்கு அவர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அக்னி சட்டியை அவர் கோவிலில் இறக்கி வைக்கும்போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு வணங்கினார். பின்னர் அம்மனை தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறேன். சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டுவது நிச்சயம் நடக்கும்.

    எதிர்க்கட்சியினர்கள் எடப்பாடி பழனிசாமியை பாதந்தாங்கி பழனிச்சாமி என விமர்சிக்கிறார்கள். காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள். ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும். தூற்று பவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார்
    • முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன்

    எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

    முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    அண்ணன் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் 'பொன்மனச் செம்மல்" பாட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து புரட்சித் தலைவர் அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதே போல், மாண்புமிகு அம்மா அவர்கள் காலத்தில் கழக இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்ணன் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும். நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    • திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
    • வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். இவருடைய உறவினர் நவீன் குமார் (வயது 42).

    இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை திருநாத முதலியார் தெருவில் வசித்து வருகிறார்.

    திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ பேனர் கடை வைத்துள்ளார். மேலும் திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று இரவு வருமானவரி துறை அதிகாரிகள் நவீன் குமார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.

    மேலும் நவீன் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் வரை பணம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரி துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மருத்துவர் சரவணன் அவர்கள் வாக்கு சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலி பொருளாக மாற்றி விடுகின்றன
    • மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் எதுவும் இல்லாதால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்

    மதுரை எம்.பி நிதி ₹17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ₹5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என சரவணன் கூறியதற்கு, ₹17 கோடியில் ₹16.96 கோடி செலவு செய்து 245 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்

    அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில்,

    "மதுரைத் தொகுதியில் அதிமுக கேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன் அவர்கள் வாக்கு சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலி பொருளாக மாற்றி விடுகின்றன. மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் எதுவும் இல்லாதால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

    உண்மையில் தேர்தல் பிரச்சாரம் என்பது கருத்தியலும் களச் செயல்பாடும் முன்வைக்கப்படும் மேடைகள், அந்த மேடைகள் ஆரோக்கியமான விவாதமாக மாற்றுவதே பண்பட்ட அரசியல். தற்போது சரவணன் அவர்கள் ஒரு ஆங்கில் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் வெங்கடேசன எம்.பி நிதிக்கான 17 கோடி ஒதுக்கீட்டில் 5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் 12 கோடியை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

    அவர் பைனாகுலர் மூடியைத்தான் திறக்காமல் வீட்டுவிட்டதாய் செய்திகள் வெளிவந்தன. உண்மையில் அவர் தனது சொந்தக் கண்களைக் கூட திறக்க மறந்து விட்டாரா? என்ற கேள்வி எழுகிறது.

    நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்ட காலத்திலும் கூட களச் செயல்பாட்டினாலும், விரைவான தலையீடுகளினாலும் கோவிட் காலத்தில் மதுரை மக்களை காக்க செய்த பணிகளை அருகிருந்து பார்த்தவர் தான், அன்றைய திருப்பரங்குன்றத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் அவர்கள்,

    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மோபாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடி 10 கோடியே 98 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக 100 சதவீதம். ஓட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம். எண்ணிக்கையில் அடிப்படையில் இவ்வளவு அதிகமான பணிகளை செய்திருப்பதே ஒரு சாதனை தான்.

    ஆனால் மரியாதைக்குரிய மருத்துவர் சரவணன் அவர்கள் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். அரசு ராசாசி மருத்தவமனை பெருந்தொற்று நோய் சிகிச்சை, அனைத்து அரசு நூலகங்களிலும் மாணவர் போட்டித் தேர்வுக்காக நூல்கள், மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுப்புற உயர்மின் கோபுர விளக்குகள், இளைஞர்களுக்கான கபாடி மைதானங்கள் என இந்தியாவிற்கு முன்னுதாரணம் சொல்லும் பல பணிகளை செய்துள்ளோம்.

    உண்மை இப்படி இருக்க 5 கோடி மட்டுமே செல்வழித்துள்ளோம். மீதப்பணந்தை செலவழிக்க வில்லை எனக்கூறுவது அவதூறுகளை தாண்டி வேறு எதுவும் ல்லை. அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல; ஆனால தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார்
    • வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும்

    அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஈரோடு தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈஸ்வரன் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அழித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கட்சியை பாஜக அழித்துவிடும். அதிமுக என்ற கட்சி இருக்காது.

    எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் பேசியுள்ளார்.

    ×