என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக... பொறுப்பாளர்கள் நியமனம்!
- டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
- மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
கேரளாவில் வரும் டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக போட்டியிடுவதாக கடந்த மாதம் அறிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர்கள் பெயரையும் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இடுக்கி மாவட்டத்தில் 19 இடங்கள், பாலக்காடு மாவட்டத்தில் 4 இடங்கள், திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2 இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியின் தொண்டர்களும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.






