செய்திகள்

தஞ்சை அருகே கஜா புயல் நிவாரணம் கேட்டு கிராம மக்கள் ‘திடீர்’ மறியல்

Published On 2019-01-02 11:24 GMT   |   Update On 2019-01-02 11:24 GMT
தஞ்சை அருகே இன்று கஜா புயல் நிவாரணம் கேட்டு கிராம மக்கள் திடீரென மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #gajacyclone #relief

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்துள்ள ரவுசாபட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து புயல் நிவாரணம் வழங்க கோரி கிராம மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் குண்டு குழியுமாக உள்ள மோசமான தார் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ரவுசாபட்டி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் இன்று காலை 10 மணியளவில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ரேசன், ஆதார் கார்டுகளை கைகளில் ஏந்தியப்படி அவர்கள் கோ‌ஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

கிராம மக்களின் மறியல் போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் வல்லம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியல் செய்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு இருந்த பெண்கள் கூறும்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை.மேலும் தார் சாலையும் மோசமான நிலையில் உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேசன், ஆதார் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு அகதிகளாக வெளியேறுவோம் என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இதை கேட்ட போலீசார் பொதுமக்களிடம் விரைவில் புயல் நிவாரணம் வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கிராம மக்களின் போராட்டத்தால் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கஜா புயல் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #gajacyclone #relief

Tags:    

Similar News