செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை- முதல்வரின் ஆய்வு பணி பாதியில் ரத்து

Published On 2018-11-20 07:48 GMT   |   Update On 2018-11-20 07:48 GMT
டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. #GajaCyclone #TNCM #Edapapdipalaniswami
திருச்சி:

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட மச்சுவாடி, மாப்பிள்ளையார் குளம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பின்னர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சென்றனர். பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பகுதி அருகே உள்ள மைதானத்தில் முதல்வர் வந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.


பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்ற முதல்வர், சூரப்பள்ளம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்ல இருந்தார்.

இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புயல் சேத ஆய்வு பணி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து முதல்வர் மற்றும் அதிகாரிகள் பட்டுக்கோட்டையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கினர். பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். அங்கு சென்றதும் அதிகாரிகளுடன் புயல் நிவாரண பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து இன்று பிற்பகலிலோ அல்லது மாலையோ எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, நாகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வார் என தெரிவித்துள்ளார்.  #GajaCyclone #TNCM #Edapapdipalaniswami
Tags:    

Similar News