செய்திகள்

20 தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா போட்டியிடுமா?- பொன். ராதாகிருஷ்ணன் பதில்

Published On 2018-11-01 06:22 GMT   |   Update On 2018-11-01 06:22 GMT
தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில், பாரதிய ஜனதா போட்டியிடுமா? என்ற கேள்விக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். #BJP #PonRadhakrishnan
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மார்‌ஷல் நேசமணி நினைவு மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டு மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய போராடிய தியாகிகள் அதற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தனர். துப்பாக்கியை காட்டிய போதும் நெஞ்சை திறந்து காட்டி வீரத்துடன் போராடினார்கள். துப்பாக்கி குண்டுக்கும் தடியடிக்கும் சிறை தண்டனைக்கும் பலர் உயிர் இழந்தனர்.

தன் உயிரை தந்து குமரி தாய் தமிழகத்துடன் இணைய பாடுபட்ட அந்த தியாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் இன்று. அனைத்து தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்துவது நமது கடமை.

தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில், பாரதிய ஜனதா போட்டியிடுமா? என்பது பற்றி மாநில பாரதிய ஜனதா முடிவு செய்யும்.


தி.மு.க.வை நாங்கள் விமர்சனம் செய்வதால் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துமா? என்று கேட்கிறீர்கள்.

தி.மு.க.வுக்கும், எங்களுக்கும் பங்காளி சண்டை எதுவும் கிடையாது. நாங்கள் அ.தி.மு.க.வையும் பலமுறை விமர்சித்து உள்ளோம். அதைபோலதான் தி.மு.க.வையும் விமர்சனம் செய்கிறோம். இதில், அரசியல் எதுவும் கிடையாது. நடந்த தவறுகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan
Tags:    

Similar News