செய்திகள்

என் மீது டெண்டரில் முறைகேடா? எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்வேன்- டிஆர் பாலு ஆவேசம்

Published On 2018-10-22 10:16 GMT   |   Update On 2018-10-22 10:16 GMT
என் மீது அவதூறு சொல்லி வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடர்வேன் என மன்னார்குடியில் நடந்த திமுக கூட்டத்தில் டிஆர் பாலு பேசினார். #trbaalu #edappadipalanisamy

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மன்னார்குடி பந்தலடியில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க பொருளாளர் துரை முருகன், தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

தேசிய நெடுஞ்சாலை துறையில் விட்ட டெண்டரில் நான் ஒரு தவறு செய்து இருந்திருந்தால் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் முதன்மை செயலாளர் பதவியை நாளைக்கே நான் ராஜினாமா செய்கிறேன். என் மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா?

என் மீது இப்படி ஒரு அவதூறு சொல்லி வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நானே தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அனுமதி பெற்று அவர் மீது வழக்கு தொடர்ந்து தனி ஆளாக நான் பார்த்துக் கொள்கிறேன்.

தி.மு.க.வில் உயர்ந்த பதவியில் இருப்பதால் தான் நான் அமைதி காத்து வருகிறேன். ஊழல் செய்து விட்டு யார் உள்ளே இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டான்சி ஊழலை ஒத்துக் கொண்டு நிலத்தை திருப்பி கொடுத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ளே இருப்பது நீங்கள். டான்சி ஊழல் செய்தது நீங்கள். தி.மு.க.வினர் தான் ஊழல் செய்தவர்கள் என்று சொல்வதற்கு அ.தி.மு.க. வினருக்கு எந்த அருகதையும் கிடையாது.

இந்தியா முழுவதும் 35 முதல்வர் இருக்கிறார்கள். அவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு கிடையாது. ஆனால் தமிழக முதல்வர் மீது சி.பி.ஐ வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னும் பதவி விலகாமல் இருந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் துரை முருகன் பேசியதாவது:-

ஊழல் தடுப்பு சட்டத்தை உருவாக்கியவரே மன்னார்குடியை சேர்ந்த சந்தானம் என்பவர். அவர் ரெயில்வேதுறை துணை மந்திரியாக இருந்தார். அவர்தான் அந்த சட்டத்தை உருவாக்கி முதல்வரும் இதில் சேர்க்க வேண்டுமென கூறியவர். அதுபோல் பல்வேறு வரலாறுகளை உடையது மன்னார்குடி.


அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றி செய்து இருக்கிறோம் என்று சொல்லமுடியுமா? தி.மு.க.வினர் செய்து வைத்த திட்டங்களை கெடுக்காமல் இருந்திருக்கிறார்களா? தஞ்சாவூர் சாலையில் அறுவடை செய்த நெல் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அது கீழே முளைவிட்டு கொண்டிருக்கிறது. இதை சரி செய்வதற்கு இங்கு உள்ள மந்திரிகளுக்கு நேரம் கிடையாது. இருக்கும் கொஞ்ச காலத்தில் எப்படியாவது சம்பாதித்து கொள்ளவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தான் செயல்பட்டு வருகின்றனர்.

ஆன்லைன் டெண்டர் முறையில் வீட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் டெண்டரை அனுப்பி வைக்கலாம், அதுபோல் வீட்டில் இருந்து டெண்டர் போட்ட ஒரு அ.தி.மு.க.வினரை காட்டச் சொல்லுங்கள்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.2500 கோடி கடன் பெற்று அதற்கு வட்டி கட்டி கொண்டிருக்கும் நிலையில் 2016-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு 2017 டெக்னிக்கல் பிட்டை ஓபன் செய்த அதிமுக அரசு, 2018 இன்றுவரை பிரைஸ் பிட்டை ஓபன் செய்யவில்லை ஏன்?

இ.பி.எஸ். -ஓ.பி.எஸ் ஆகியோர் மோடியை சந்தித்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடி இருவருமே கெட்டவர்கள் என்று கூறி வருகிறார்.

அ.தி.மு.க.வை தவிர மற்ற அனைவரும் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராக இருக்கிறார்கள். அகில இந்திய கட்சிகள் ஸ்டாலின் என்ன சொல்கிறார் என்பதை உற்று கவனித்து வருகின்றன. எப்படி கருணாநிதி ஒரு காலத்தில் யார் ஜனாதிபதி என்பதையும, யார் பிரதமர் என்பதையும் நிர்ணயம் செய்தாரோ, அதேகாலம் தற்போது வந்துவிட்டது. தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டும், நபர் தான் நாட்டின் பிரதமர், ஜனாதிபதியாக வரும் காலம் வரும். இன்றைக்கு தேர்தல் வந்தாலும் ஸ்டாலின் தான் முதல்- அமைச்சராக வருவார்.

இவ்வாறு தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசினார்.

கூட்டத்துக்கு மாநில மாணவரணி துணை செயலாளரும் மன்னை அவர்களின் பேரனு மான த.சோழராஜன் தலைமை தாங்கினார். துரை.பாஸ்கரன் வரவேற்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி.ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் பூண்டி, கே.கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் ஈசன குடி இளங்கோவன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தென்னவன், தலைமை செயற் குழு உறுப்பினர் தலையா மங்கலம் பாலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகரசெயலாளர் வீரா. கணேசன் நன்றி கூறினார். #trbaalu #edappadipalanisamy

Tags:    

Similar News