செய்திகள்

ஆயுதபூஜை, விஜயதசமி திருநாள்- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Published On 2018-10-17 05:39 GMT   |   Update On 2018-10-17 05:39 GMT
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #ADMK #Edappadipalaniswami #Ayudhapooja
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நவராத்திரி விழாவையும், வெற்றித் திருநாளாம் விஜயதசமி திருநாளையும் நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாட்களில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையான வீரம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றை அருள வேண்டி, நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின், முதல் மூன்று நாட்கள் வீரமிகு துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வம் பொழியும் லட்சுமி தேவியையும், நிறைவாக மூன்று நாட்கள் கல்வி தரும் சரஸ்வதி தேவியையும், மக்கள் பக்தியுடன் போற்றி வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமாகும்.

“செய்யும் தொழிலே தெய்வம்” என்பதை உணர்ந்து, மக்கள் தங்கள் தொழில் சார்ந்த கருவிகளை இறைபொருட்களாக பாவித்து, தொழில் பெருக அதற்கு பூஜை செய்து, வாழ்வில் வளம்பெற தெய்வத்தை வணங்கிடும் நன்னாள் “ஆயுத பூஜை” திருநாளாகும்.

விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் செயல்கள் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முதலாக கல்வியை தொடங்குதல், புதிய தொழில்களை ஆரம்பித்தல் போன்ற புதிய முயற்சிகளை துவக்கி, விஜயதசமி திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த சிறப்புமிக்க திருநாளில், அன்னையின் அருளால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, நலமுடனும், வளமுடனும் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ADMK #Edappadipalaniswami #Ayudhapooja
Tags:    

Similar News