செய்திகள்

மணல் கொள்ளைக்காக கடலில் கலந்த தண்ணீரை தடுக்கவில்லை- காங்கிரஸ் பொது செயலாளர் குற்றச்சாட்டு

Published On 2018-08-23 14:40 GMT   |   Update On 2018-08-23 14:40 GMT
மணல் கொள்ளைக்காக கடலில் கலந்த தண்ணீரை தமிழக அரசு தடுக்கவில்லை என்று காங்கிரஸ் பொது செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர்:

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கோவா மாநில பொறுப்பாளருமான டாக்டர் செல்லக்குமார் கரூர் காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகம் மற்றும் கேரளாவில் பெய்த மழையின் காரணமாக காவிரி மூலமாக 120 டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று வீணாக கலந்துள்ளது. இதற்கு தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் செய்த தவறே காரணம். இதில் தமிழகத்தில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். 

வாய்க்கால்களை தூர் வாருகிறோம் என பல நூறு கோடி மக்களின் வரிப்பணத்தை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்து கடைமடை வரை கொண்டு செல்ல பல ஆண்டுகளாக காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. ஆனால் தற்போது தண்ணீரை கடலில் கொண்டு சேர்ப்பதில்தான் அரசு தீவிர ஆர்வம் காட்டியது. காரணம் மணல் கொள்ளைக்காக தான் இந்த வேகம். 19-ந்தேதி மேட்டூர்அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் 20-ந்தேதிக்கு பிறகு தூர்வார நிதி ஒதுக்குவதாக  அறிவிக்கிறார்.  

இது யாரை ஏமாற்றுவதற்கு என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மத்திய பா.ஜ.க.  அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 8 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என வாக்குறுதி அளித்தது. இது வரை 8 லட்சம் பேருக்கு கூட அவர்கள் வேலை கொடுக்க வில்லை. மோடி அரசு ராணுவ விமானங்கள் வாங்கியதில் ஊழல் செய்திருக்கிறது. அதனால் தான் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரதமரால் பதிலளிக்க இயலவில்லை.

பிரதமர் மோடி தான் செய்த  குற்றத்தை ஓப்புகொண்டு தானாகவே பதவியில் இருந்து விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின்போது மாவட்ட தலைவர் சின்னசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க். சுப்பிரமணி, செய்தி தொடர்பாளர் ஜோதிமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News