உலகம்

துபாயில் 75 ஆண்டுகளுக்கு பிறகு பெய்யும் வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் தவிப்பு

Published On 2024-05-03 05:09 GMT   |   Update On 2024-05-03 05:09 GMT
  • பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.
  • துறைமுகம் மற்றும் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

துபாய்:

ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் துபாய், அபுதாபி, சார்ஜா போன்ற நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள், நடைமேடைகள், சுரங்க பாதைகள் என அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கி போய் உள்ளது.

தேங்கி கிடக்கும் மழைநீரில் வாகனங்கள் தத்தளித்த படி சென்றன. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் ஆறு போல ஓடியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து துபாய் வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

துபாயில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக விமான நிலையத்தில் பயணிகள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இன்று 2-வது நாளாக தொடர்ந்து துபாயில் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரம் சூறாவளி காற்று வீசுகிறது. இடைவிடாத மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.

துறைமுகம் மற்றும் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

சார்ஜாவில் மழையால் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் போன்ற நகரங்களில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவும் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதுவரை கடும் வறட்சியால் செயற்கை மழையை உருவாக்கி வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்போது இயற்கை மழையால் தத்தளித்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வரலாறு காணாத வகையில் பேய் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கால நிலை மாற்றத்தால் வருங்காலங்களில் வளைகுடா நாடுகளில் வெப்பம் மேலும் அதிகரித்து வெப்ப சலனம் காரணமாக கன மழை பெய்யும் என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News