உலகம்

ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை- அமெரிக்க அதிபர் டிரம்ப்

Published On 2026-02-28 10:32 IST   |   Update On 2026-02-28 10:32:00 IST
  • ஈரானை தாக்க அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை.
  • அமெரிக்கா-ஈரான் இடையே 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்த நிலையில் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.

ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அதற்கான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இவ்விவகாரத்தில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் ஈரானுடனான பேச்சுவார்த்தை எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. நமக்கு இருக்க வேண்டியதை அவர்கள் எங்களுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

மத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தவிர்க்க ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக நேரம் கொடுக்கிறேன். ஈரானை தாக்க அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை.

சில நேரங்களில் நீங்கள் அதை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அவர்கள்(ஈரான்) பேச்சுவார்த்தை நடத்தும் விதத்தில் நாங்கள் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை. அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது என்றார்.

சமீபத்தில் ஜெனீவாவில் அமெரிக்கா-ஈரான் இடையே 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்த நிலையில் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஈரானில் உள்ள தங்கள் நாட்டு குடி மக்கள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.

Tags:    

Similar News