தமிழ்நாடு

பாலைவனமாக மாறும் அபாயம்- அதிகபட்ச வெயில் பதிவாவது ஏன்?

Published On 2024-05-03 05:04 GMT   |   Update On 2024-05-03 05:04 GMT
  • வெப்ப அலை வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  • கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகிதம் தான் காடுகளின் அளவு உள்ளது.

கரூர்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் வெயில் சதம் அடித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக நேற்று முன்தினம் 113 டிகிரி பதிவானது. நேற்று 112 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, கரூர் பரமத்தியில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரிப்பதற்கு நிலப்பரப்பின் தன்மையே காரணம் என்கின்றனர் அறிவியலாளர்கள். இந்த பகுதியில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.

வரலாறு காணாத வெயில் பதிவினால் கரூர் மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். க.பரமத்தி பகுதிக்குட்பட்ட தென்னிலை, பவித்ரம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதியில் விவசாயம் சார்ந்த ஆடு, மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள், ஆடு மாடு தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்களின் நடமாட்டம் வெளியே குறைந்து உள்ளது. மேலும், கிராமப்புற சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

கொளுத்தும் வெயிலால் சாலைகளில் கானல் நீர் மற்றும் வெப்ப அலை வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் சாலைகளில் குடைபிடித்தப்படி செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றிக் கொண்டு செல்கின்றனர்.

பொதுவாக கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிகம் வெப்பம் பதிவாகும். ஆனால், கடந்த சில வருடங்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதிதான் அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக மாறியுள்ளது. அதற்கு காரணம், இங்கு மரங்கள் குறைவாக உள்ளதும், மழையை அதிகம் ஈர்க்காத சுண்ணாம்பு மண் நிறைந்த பகுதி என்பதும் தான். பொதுவாக நல்ல இயற்கை சூழல் இருக்க வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்தில் 32 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்.

ஆனால், கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகிதம் தான் காடுகளின் அளவு உள்ளது. இதனால், வெப்பம் கடுமையாக இருக்கிறது. அதேபோல், க.பரமத்தி பகுதியில் அதிக வெயில் அடிக்க காரணம் இங்கு இயங்கி வரும் 300-க்கும் மேற்வட்ட கல்குவாரிகள் தான். இங்கு அதிகம் மரங்கள் வளர்க்க வேண்டும். கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் வருங் காலங்களில் இங்கு வெயில் தணியும். இல்லையென்றால், க.பரமத்தி பகுதியே மனிதர்களே வசிக்க முடியாத அளவுக்கு பாலை வனமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.


காவிர் பாயும் மாவட்டத்தில் உள்ள க.பரமத்திக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் மக்கள். இந்தப் பகுதி மக்கள் அதிகம் வெயிலிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வீட்டில் இருப்பது நல்லது. அல்லது குடை போன்ற தற்காப்பு பொருள்களை பயன் படுத்துவது சிறந்தது. முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேவையான தண்ணீரை அனைத்து மக்களும் அருந்த வேண்டும்" என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக கரூர் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் ஜான் பாஷா கூறியதாவது:-கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அதிகபட்சமாக 90 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை மட்டுமே பதிவானது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னரே 100 டிகிரி தாண்டியது. மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆராய்ச்சி மையம் கரூரில் பரமத்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

பூமியின் அட்சரேகையில் நேரடியாக பரமத்தி பகுதி வருவதால் அங்கு வானிலை ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. பொதுவாக பரமத்தி பகுதியில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

குறிப்பாக இங்கு பவர் கிரேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளிலும் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. கல் குவாரிகள் இந்த பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குவாரி இருக்கும் பகுதிகளிலும் மரங்கள் இல்லை.

இது போன்ற காரணங்களால் பரமத்தி பகுதியில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது 120 டிகிரியை தாண்டிவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு உயர வாய்ப்பில்லை. 120 டிகிரியை தாண்டிவிட்டால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாது. அதையும் மீறி வெளியே சென்றால் பக்கவாதம், மாரடைப்பு மயக்கம் போன்றவை ஏற்படும்.

குழந்தைகளுக்கு அம்மை மற்றும் காசநோய் வர வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழல் இப்போதைக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறினால் 2040 காலகட்டத்தில் 120 டிகிரியை தாண்டிய வெப்பநிலையை சந்திக்க நேரிடும் என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கரூர் பரமத்தி பகுதிக்கு பிரத்யேக திட்டம் தயாரித்து அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். திரும்பும் திசையெல்லாம் மரங்கள் நடப்பட்டால் நிச்சயமாக வரும் காலங்களில் வெயில் அதிகரிப்பை கட்டுப் படுத்தலாம் என்றனர்.

Tags:    

Similar News