செய்திகள்

போலீஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-03-14 01:21 GMT   |   Update On 2018-03-14 01:21 GMT
குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி போலீஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, தமிழக உள்துறை முதன்மை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் விசாரணை ஆணையத்தை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி, கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சாட்சியம் அளித்தேன்.

இதனால் பாதிக்கப்பட்ட செல்வாக்கு உள்ள செல்வந்தர்கள் ஒன்று சேர்ந்து எனக்கு எதிராக செயல்பட்டனர். எனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, எனக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகளை சுமத்தி, குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அந்த 8 குற்றச்சாட்டுகளில், 6 குற்றச்சாட்டுகள் ஊடகங்களுடன் கலந்துரையாடல் செய்தது. 7-வது குற்றச்சாட்டு மகேந்திர சிங் ரங்காவிடம் பணம் வாங்கியது. 8-வது குற்றச்சாட்டு வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்காதது ஆகும்.

கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை ஆணையத்திடம் நான் விளக்கம் அளித்ததாலும், ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாலும், எனக்கு எதிராக உள்நோக்கத்துடன், இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளன.

எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு முதலமைச்சர் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் முறையான அனுமதியை பெறவில்லை.



உள்நோக்கத்துடன், எனக்கு அனுப்பிய குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தேன். என்னுடைய வழக்கை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையும், குற்றச்சாட்டு குறிப்பாணையையும் ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர், மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக உள்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #tamilnews
Tags:    

Similar News