செய்திகள்

4 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் புறப்பட்டு சென்றது

Published On 2017-12-06 04:10 GMT   |   Update On 2017-12-06 04:10 GMT
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து 4 நாட்களுக்கு பின்னர் இன்று தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்:

மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் இந்த ரெயில் புறப்பட்டு சென்று வருகிறது.

இந்த ரெயிலில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணம் செய்து இயற்கை காட்சிகளை ரசித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் பாறாங்கல் மற்றும் மரங்கள் விழுந்தது. இதனால் ஊட்டி மலை ரெயில் சேவை கடந்த 2-ந் தேதி நிறுத்தப்பட்டது.

மலை ரெயில் பாதையில் விழுந்த மரங்கள், பாறைகளை மலை ரெயில் இருப்பு பாதை பொறியாளர்கள் ஜெயராஜ் (பொறுப்பு), வெள்ளியங்கிரி ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்

மலைப்பாதையில் விழுந்த மரங்கள் மற்றும் பாறைகள் அகற்றும் பணி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து மலை ரெயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் மலை ரெயில் இயக்கப்பட்டது.

இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் புறப்பட்டு சென்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 4 நாட்களுக்கு பின்னர் மலை ரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News