உலகம்

ஹமாஸ் பிடித்துச்சென்ற பிணைக்கைதிகளில் மூன்று பேரின் உடலை காசாவில் இருந்து மீட்ட இஸ்ரேல்

Published On 2024-05-24 13:20 GMT   |   Update On 2024-05-24 13:20 GMT
  • 250 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
  • 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா முனையில் ஆட்சி அதிகாரம் செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினார்கள். அத்துடன் 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்திய வருகிறது. இந்த சண்டை ஏழு மாதங்களை தாண்டி நடைபெற்று வருகிறது.

போருக்கு இடையே கடந்த டிசம்பர் மாதம் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

ஒரு பக்கம் பிணைக்கைதிகளை மீட்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் மறுபக்கம் இனிமேல் ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் நாட்டிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்தது.

தற்போது பாலஸ்தீனர்கள் அதிகளவில் வசித்து வரும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே பெண் ராணுவ வீரர்களை பிடித்து வைத்திருக்கும் வீடியோவை வெளியிட்டது.

இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு இணைந்து நடத்திய நடவடிக்கையில் மூன்று பிணைக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹனான் யாப்லோன்கா, மைக்கேல் நிசென்பாயும், ஓரியன் ஹெர்னாண்டஸ் ஆகியோர் காசா முனைக்கு கடத்திச் செல்லப்பட்டார்கள். தற்போது அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

121 பிணைக்கைதிகள் இன்னும் ஹமாஸ் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. 37 பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

காசாவில் உள்ள ஜபாலியா நகரில் உடல்கள் மீட்கப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News