செய்திகள்

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பெண்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்: ராமதாஸ்

Published On 2017-12-05 09:33 GMT   |   Update On 2017-12-05 09:33 GMT
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பெண்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் என தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் ராமதாஸ் பேசினார்.
திண்டிவனம்:

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.வின் மாநில மகளிரணி ஆலோசனை கூட்டம் நடந்தது. மகளிரணி தலைவி நிர்மலா ராஜா தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு பொது மக்கள் பா.ம.க.வை ஆதரிக்கும் வகையில் மகளிரணியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இதன் மூலம் பெண்களின் துயர் போக்கப்படும். குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர்கள் செலவு செய்யும் நிலை மாறி அரசே செலவிடும்படி செய்யப்படும். ஒவ்வொரு குடும்பத்தினரின் மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்கள், விதைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்.

திராவிட கட்சிகளால் தமிழகம் மது குடிக்கும் மாநிலமாக மாறியுள்ளது. மதுவால் கிராம புறங்களில் 60 சதவீத பெண்கள் விதவைகளாக உள்ளனர். பெண்கள் அனைவரும் படித்து வேலைக்கு சென்று வருமானத்திற்கு வழிவகுத்து கொள்ள வேண்டும். இதுவே அனைத்துக்கும் பாதுகாப்பாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் டாக்டர் தமிழரசி, மாநில துணை தலைவர் திலகபாமா, பானுமதி சத்யமூர்த்தி, ராஜேஸ்வரி பிரியா, சிலம்பு செல்வி, கடலூர் மாவட்ட முன்னாள் சேர்மன் வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News