செய்திகள்

சூளகிரி அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியதால் தெப்பம் விட்டு மக்கள் வழிபட்டனர்

Published On 2017-10-23 13:34 GMT   |   Update On 2017-10-23 13:35 GMT
சூளகிரி அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியதால் அப்பகுதி மக்கள் தலையில் தெப்பம் வைத்து, மாவிளக்குடன் அணையை சுற்றி 3 முறை வலம் வந்தனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாறு அணை உள்ளது. இந்த அணையானது நீண்ட காலமாக நீரின்றி வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் சூளகிரி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக சின்னாறு அணையில் நீர் மட்டம் மளமளவென்று உயர்ந்தது. 17 ஆண்டுகளுக்கு பிறகு அணையும் முழுமையாக நிரம்பியதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நேற்று அணையருகே உள்ள வேம்பள்ளி, இண்டிகானூர், கிருஷ்ணேபள்ளி, கூராக்கலபள்ளி மற்றும் தேக்கலபள்ளி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று கங்கையம்மனை வழிபட்டனர்.

மேலும், கோவில் பூசாரிக்கு பெண் வேடமிட்டு பூஜைகள் செய்தனர். பின்னர் ஆடு வெட்டி, அதன் தலையை தெப்பத்தில் வைத்து, மாவிளக்குடன் அணையை சுற்றி 3 முறை வலம் வந்தனர். பின்னர் வெட்டப்பட்ட கிடாவை, கிராம மக்கள் பங்கு போட்டு எடுத்துச்சென்றனர். இதில், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News