செய்திகள்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்: தம்பிதுரை

Published On 2017-09-17 16:25 GMT   |   Update On 2017-09-17 16:25 GMT
மத்திய அரசின் நவோதயா கல்வி திட்டத்தை ஜெயலலிதா ஏற்கவில்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று தம்பிதுரை கூறினார்.

கரூர்:

கரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பெரியார் உருவப்படத்திற்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

தந்தை பெரியார், அண்ணா கொள்கைகளின்படி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். இந்த தலைவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு மாநில உரிமைகளை நிலை நாட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்தினார்.

தற்போது ஜெயலலிதா வழியில் எடப்பாடி அரசு செயல் பட்டு வருகிறது. 5 ஆண்டு காலத்தை இந்த அரசு முழுமையாக பூர்த்தி செய்யும். ஜெயலலிதாவின் எண்ணப்படி நூறாண்டு காலம் தமிழகத்தை அ.தி.மு.க. ஆளும். அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின் மாற்று இயக்கத்திற்கு தொண்டர்கள் யாரும் செல்ல வில்லை. மத்திய அரசின் நவோதயா கல்வி திட்டத்தை ஜெயலலிதா ஏற்கவில்லை.

எமர்ஜென்சி காலக் கட்டத்தில் இந்திரா காந்தி கல்வியை பொதுப்பட்டியலுக்கு எடுத்து சென்றார். மீண்டும் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற அ.தி.மு.க. முயற்சி மேற்கொள்ளும். மற்ற மாநிலங்களுடன் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தி மாநில பட்டியலுக்கு மாற்ற பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

நவோதயா பள்ளிகளை ஒரு சில இடங்களில் திறப்பதால் கல்வித்தரம் மேம்படாது. தமிழகத்தில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதியை தமிழக அரசிடம் வழங்கினால் அதன் மூலம் கல்வி தரத்தை மேம்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News