செய்திகள்

மாதவரத்தில் மதுக்கடைக்கு எதிராக கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

Published On 2017-08-09 10:26 GMT   |   Update On 2017-08-09 10:26 GMT
மாதவரத்தில் குடிமகன்களால் ஏற்படும் தொல்லையால் மதுக்கடைக்கு எதிராக கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

தமிழகம் முழுவதும் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மதுக்கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதேபோல கல்லூரி மாணவ-மாணவிகளும், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள மதுக் கடைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள்.

மாதவரம் பால் பண்ணை அருகில் மஞ்சம்பாக்கம் சாலையில் அகர்சன் கலை கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த கல்லூரிக்கு அருகில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதன் பின்னர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு குடிமகன்களால் தொல்லை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கல்லூரி நிர்வாகம் சார்பில் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. மாணவ-மாணவிகளும் மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இந்த கோரிக்கைக்கு அரசு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அகர்சன் கல்லூரி மாணவ-மாணவிகள் மஞ்சம்பாக்கம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இன்று காலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் 12 மணி வரையில் நீடித்தது. இதனால் மஞ்சம்பாக்கம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாசில்தார் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், மாதவரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் கங்கா, சண்முகசுந்தரம் ஆகியோர் மாணவ- மாணவிகளுடன் சமாதான பேச்சு நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை மூடுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை எற்று மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் மாணவ-மாணவிகளுடன் கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவ-மாணவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News