செய்திகள்

போராட்டம் நடத்தி வரும் கதிராமங்கலம் மக்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்

Published On 2017-07-12 08:52 GMT   |   Update On 2017-07-12 08:52 GMT
கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும் என ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 30-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் எண்ணெய்க் குழாய் உடைந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை பொறுமையாக கையாண்டிருக்க வேண்டிய தமிழகக் காவல்துறை கண் மூடித்தனமாக பொது மக்கள் மீது தடியடி நடத்தியது. அத்துடன் மீத்தேன் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதன்பிறகுதான் கதிராமங்கலம் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நேற்று கதிராமங்கலம் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி, ஊர்ப்பொது இடத்தில் ஒன்று கூடி சமைத்து உண்ணும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.



ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு மட்டும் இன்னும் இரக்கம் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, கதிராமங்கலம் மக்களை பகையாளிகளாக நினைத்துக் கொண்டு அவர்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரையும், அடக்கு முறையையும் தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை ஒருபோதும் சகிக்க முடியாது.

கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தமிழக அரசோ அவர்களை குண்டர்கள் சட்டத்தில் சிறையில் அடைக்கும் நோக்குடன் அடுத்தடுத்து பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது.

பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் பிணை மனுக்கள் நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் தயாராக இருந்தது. ஆனால், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரும் காவலர்களை அடித்துக் காயப்படுத்தியதாகவும், அந்தக் காவலர்கள் இன்னும் குணமடையாததால் அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தியதால் அவர்களின் பிணை தாமதமாகிறது.

தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக போராடும் கதிராமங்கலம் மக்களை பகையாளிகளாக நினைத்து பழிவாங்குவது தேவையற்றது. கதிராமங்கலம் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும். மக்களுக்காக போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News