செய்திகள்

மத்திய அரசு புதுவைக்கு போதுமான நிதி வழங்கவில்லை: நாராயணசாமி

Published On 2017-06-07 04:58 GMT   |   Update On 2017-06-07 04:59 GMT
மத்திய அரசு புதுவைக்கு போதுமான நிதி வழங்கவில்லை என அரசின் ஓராண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவு விழா ஆனந்தா இன் ஓட்டல் கருத்தரங்கு அறையில் நடந்தது.

மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி ஓராண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

மத்திய அரசு புதுவைக்கு கொடுக்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை.

தற்போது 27 சதவீதம் மட்டுமே மானியம் வழங்கி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு 42 சதவீதம் வரை வழங்கி வருகிறது. புதுவை மாநிலத்துக்கு தனிக்கணக்கு தொடங்குவதற்கு முன்பு 70 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் 30 சதவீதமாக மாற்றப்பட்டது. தற்போது 27 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு கொடுப்பது ரூ.576 கோடிதான். வரி மூலம் வருவாய் ரூ.4 ஆயிரம் கோடி ஆகும். 13 லட்சம் மக்கள் தொகை உள்ள புதுவை மாநிலத்தில் இதற்கு மேல் நிதி அளிக்க முடியாது.

புதுவையில் சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். புதுவையில் ரவுடிகளுக்கு இடமில்லை. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரவுடிகளுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ரவுடிகள் இங்கிருந்து வெளியேறி விட்டனர். ரவுடிகளின் சொத்துக்களை பறிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடல், பத்திர பதிவுக்கு தடை, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக அமல்படுத்துதல் போன்ற காரணங்களால் அரசுக்கு ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. மத்திய அரசு போதுமான நிதியை நமக்கு வழங்கவில்லை. இருப்பினும் நாம் நமது திட்ட நிதியை முறையாக திட்டமிட்டு செலவு செய்ததால் 93.4 சதவீதம் நிதியை செலவு செய்ய முடிந்தது. சிறப்பு கூறு நிதி முழுமையாக ஆதிதிராவிட மக்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

எந்த தடைகள் வந்தாலும் இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை, சென்டாக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். சிறிய மாநிலங்களில் புதுவையை முதல் நிலைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News