search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் அமைச்சர் நாராயணசாமி"

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமியின் தாயார் மரணமடைந்ததையடுத்து மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆகியோர் அவரது தாயார் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறினர். #Narayanasamy #MKstalin
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள். 96 வயதான ஈஸ்வரி அம்மாள் தனது சொந்த கிராமமான பூரணாங்குப்பத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி அம்மாள் மரணமடைந்தார்.

    அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வந்தார். அங்கு ஈஸ்வரி அம்மாள் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுவை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    பின்னர் மீண்டும் மு.க.ஸ்டாலின் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சேலத்திற்கு சென்றார்.

    அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயாரின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது. நேற்றைய தினமே நேரில் வந்து அஞ்சலி செலுத்த நினைத்தேன். ஆனால், சூழ்நிலை காரணமாக என்னால் வர இயலவில்லை.

    எனவே, இன்று வந்து முதல்-அமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளேன் என்றார்.

    முன்னதாக இன்று காலை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டுக்கு வந்து ஈஸ்வரி அம்மாள் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர்.  #Narayanasamy #MKstalin
    தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயவேணி, நெட்டப்பாக்கம் தொகுதி கரையாம்புத்தூர் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் இந்த நிதியாண்டிலாவது அமைத்துத்தரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் கமலகண்ணன், அரசின் நிதி நிலையை பொறுத்து தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.

    அப்போது உறுப்பினர் விஜயவேணி, ஒரு தீயணைப்பு வாகனமாவது கொடுங்கள். அதை நாங்கள் கையில் இழுத்துச்சென்றாவது விபத்து நடக்கும்போது பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்.

    காங்கிரஸ் உறுப்பினர்கள் தனவேலு, அனந்தராமன் ஆகியோர், கிராமங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி நிதி அளிக்கவுள்ளோம். இதன்மூலம் உரிய தீயணைப்பு நிலையங்களை ஏற்படுத்தி தருவோம். உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று கூறினார்.

    புதுவையில் தொடரும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் சிவா பூஜ்ய நேரத்தில் பேசியதாவது:-

    புதுவையில் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் கடந்த 3 மாதங்களாக அதிகளவில் அரங்கேறியுள்ளது. கோடை விடுமுறையில் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தவர்களின் வீடுகளை நோட்டமிட்டு குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது.

    முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை என நகர பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்தது. புதுவையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டினர். இதே நேரத்தில் கோவில் உண்டியல்களை ஒரு கும்பல் உடைத்து திருடிச்சென்றது.

    தேங்காய்திட்டில் அடுத்தடுத்து கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுபோல 15-க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் திருட்டு சம்பவங்கள் நடந்தது. நகர பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் தாலி செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடந்தது.

    பகல் நேரத்திலேயே அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் பெண்களிடம் இருந்தும், வீடு திரும்பும் பெண்களிடமும் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டினர். இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. பத்திரிகைகளிலும் இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதுபோன்ற சம்பவங்கள் தற்போதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை.

    வழிப்பறி, கொள்ளை, திருட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்கவில்லை. அரசு இதுபோன்ற செயல்களில் செயல்படும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கடந்த காலத்தை போல இரவு முழுவதும் நகரை சுற்றி வர காவல் ரோந்து வாகனம்(100) மீண்டும் இயக்க வேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ஜெயமூர்த்தி பேசும்போது, அரியாங்குப்பத்தில் 3 இடத்தில் திருட்டு சம்பவம் நடந்தது. திருடர்களை பிடிக்கவில்லை என்றார்.

    இதையடுத்து அதி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், இரவு நேரத்தில் காரில் வருபவர்கள்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீடுகளை நோட்டமிடுகின்றனர். காரில் வருபவர்களை சோதனை செய்தாலே திருட்டு சம்பவங்கள் குறைந்துவிடும். முதல்-அமைச்சர் வழக்குப் பதிவு செய்வதாக கூறுகிறார். ஆனால் 25 நாட்களுக்கு முன்பு சோலை நகரில் ஒரு வீட்டில் 20 பவுன் நகையை திருடிவிட்டனர். இந்த வழக்கை பதிவு செய்ய போலீசார் முன்வரவில்லை.

    திருட்டு, கொள்ளையை கண்டுபிடிக்கிறார்களோ? இல்லையோ? முதலில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவையில் சில இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் சில பகுதிகளில் கடந்த 3 மாதம் முன்பு நடந்தது. இதை வெளிமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடிச்சென்றனர். இதுகுறித்து காவல்துறையை அழைத்து பேசினேன். பொதுவாக காவல்துறை நள்ளிரவு 12 மணி வரை ரோந்து செல்வார்கள். அதன்பிறகு செல்லமாட்டார்கள். அதிகாலை வரை ரோந்து செல்லும்படி கேட்டுக் கொண்டேன். போலீசாரும் அதிகாலை வரை ரோந்து செல்கின்றனர். இதனால் ஒன்றரை மாதமாக திருட்டு குறைந்துள்ளது. போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இரவு நேரத்தில் போலீசார் பணியாற்றுகிறார்களா? என டி.ஜி.பி., எஸ்.எஸ்.பி. பார்வையிடவும் கூறியுள்ளேன். கடந்த காலத்தில் திருட்டு, கொள்ளை வழக்கு பதிவு செய்யமாட்டார்கள். தற்போது புகார் கொடுத்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. நான் எம்.பி.யாக இருந்தபோது காவல்துறைக்கு ரோந்து வாகனம் வழங்கினேன். தற்போது எம்.பி.க்களிடம் காவல்துறைக்கு ரோந்து வாகனம் வழங்கும்படி கேட்டுள்ளோம். 10 ரோந்து வாகனம் விரைவில் வழங்கப்பட்டு ரோந்து பணி துரிதப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜி.எஸ்.டி. அமலுக்கு முன்பு ரூ.1565 கோடியாக இருந்த வரி வருவாய், ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு ரூ.1861 கோடியாக உயர்ந்துள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    அன்பழகன்:- புதுவையில் ஜி.எஸ்.டி. வரி எப்போது கொண்டுவரப்பட்டது? வரி விதிப்பிற்கு முன், வரி விதிப்பிற்கு பின் நமக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு? ஜி.எஸ்.டி. வரியை முறையாக செயல்படுத்த விற்பனை வரித்துறையில் போதிய பணியாளர்கள் உள்ளனரா?

    முதல்-அமைச்சர் நாராயணசாமி: 1.7.2017 முதல் புதுவை மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது.

    2017-18-ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்னர் உள்ள மாதங்களில் வாட் மற்றும் ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டிய 4 மாத வரி ரூ.609 கோடியே 36 லட்சம்.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் 1718-ம் நிதியாண்டில் ஆகஸ்டு முதல் மார்ச் வரை வாட், சிஎஸ்டி, ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டிய வருவாய் ரூ.1252 கோடியே 23 லட்சம். ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பின்னர் ஏற்கனவே உள்ள 49 பணியிடங்களுடன் கூடுதலாக 13 பணியிடங்களை உருவாக்கி உள்ளோம்.

    புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களையும் சேர்த்து காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    அன்பழகன்:- ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியதால் வருவாய் அதிகரித்துள்ளதா? இல்லையா? மத்திய அரசு வரி இழப்பு ஏற்பட்டால் தருவதாக கூறினார்களே?

    நாராயணசாமி:- ஜி.எஸ்.டி. அமலுக்கு முன்பு ரூ.1565 கோடி வரி வருவாய் இருந்தது. ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு ரூ.1861 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஜி.எஸ்.டி.யால் வரி வருவாய் உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. அமல்படுத்திய இடைப்பட்ட 3 மாத காலத்தில் ஏற்பட்ட வரி இழப்பு ரூ.333 கோடி. இதை மத்திய அரசு தருவதாக உறுதியளித்துள்ளது.

    அன்பழகன்:- வணிக வரித்துறையில் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் முறையாக வரியை வசூலிக்க முடியவில்லை. நகை கடையில் மதிப்பீட்டு ரசீது மட்டுமே தருகின்றனர். இதை கண்காணிக்க போதிய ஆட்கள் இல்லை. இதனால்தான் வரி குறைகிறது. ரெடிமேடு துணி கடைகளில் 50 சதவீத வரியை பில்லில் காட்டுவதே கிடையாது.

    நாராயணசாமி:- வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்தது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. துணை வணிக வரி அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம்.

    இதுதொடர்பாக ஒருவர் கோர்ட்டிற்கு சென்றுள்ளார். இதனால் உடனடியாக நியமிக்க முடியாமல் தடை ஏற்பட்டது. உதவி வணிக வரி அதிகாரியை நியமிக்க உள்ளோம். ஓட்டல்கள், துணி கடைகள், நகை கடைகளில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

    வணிகர்கள் முழுமையாக வரியை கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளேன். சோதனைக்கு சென்றால் வணிகர்கள் புகார் செய்கின்றனர்.

    சிவா:- வரி ஏய்ப்பு சோதனைக்கு அதிகாரிகள் சில குறிப்பிட்ட கடைகளுக்கே மீண்டும், மீண்டும் செல்கின்றனர்.

    ரூ.பல கோடி வரியை ஏப்பம் விட்டவர்கள் யார்? என்பது அதிகாரிகளுக்கு தெரியும். அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிறியளவில் வியாபாரம் செய்பவர்களுக்கே தொல்லை தருகின்றனர்.

    ரூ.ஒரு லட்சம் லாபம் பெறும் கடைக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கின்றனர். பெட்ரோல் பங்கில் ரூ.பலகோடி வரி பாக்கியை வசூலிக்காமல் விடுகின்றனர்.

    நாராயணசாமி:- பெட் ரோல், டீசல் வரியை கட்டாத பல நிறுவனங்களுக்கு 200 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.

    தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்களில் சமாதான திட்டம் என்ற பெயரில் வரியை வசூலிக்கின்றனர். அதேபோல வரியை வசூலிப்பது தொடர்பாக பரிசீலனை செய்ய உள்ளோம்.

    வரி ஏய்ப்பு என்ற பெயரில் திட்டமிட்டு சில கடைக்கு செல்வதாக எங்களுக்கும் புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளோம். வணிகர்கள் தாமாகவே முன்வந்து உரிய வரியை செலுத்த வேண்டும் என மீண்டும் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    கவர்னர் பற்றிய தீர்ப்பு புதுவைக்கு முற்றிலும் பொருந்தும் என்றும், கவர்னர் கிரண்பேடி இதை சரியாக தெரிந்து கொள்ளாமல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி கூறினார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? இல்லையா? என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுபற்றி நாராயணசாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தும் என்று நான் ஏற்கனவே கூறினேன். இப்போதும் அதையே தான் சொல்கிறேன். இந்த தீர்ப்பு முற்றிலும் புதுவைக்கு பொருந்தும்.

    அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின்படி டெல்லி மாநில அரசு செயல்படுவதால் அந்த சட்டத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

    239 ஏ.ஏ. பிரிவின்படி டெல்லி மாநிலத்தில் நிலம், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    மேலும் பல வி‌ஷயங்கள் அந்த பிரிவின் கீழ் உள்ளன. எனவேதான் 239 ஏ. பிரிவின் கீழ் உள்ள மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று கூறி உள்ளனர்.

    அதாவது டெல்லி யூனியன் பிரதேசத்தில் கவர்னருக்கு அதிகாரமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா? என்ற விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறி இருக்கிறார்கள். தீர்ப்பில் இந்த அம்சம் புதுவைக்கு பொருந்தும்.

    ஏனென்றால் யூனியன் பிரதேசங்களில் டெல்லிக்கு அடுத்து புதுவையில் மட்டும்தான் சட்டசபை உள்ளது. மக்கள் ஆட்சி செயல்படுகிறது.

    இந்த அம்சம் தொடர்பாக கூறப்பட்ட தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என்று நீதிபதிகள் எதுவும் சொல்லவில்லை. எனவே, டெல்லி சம்பந்தமான தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும். இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.

    239 ஏ. என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இல்லாத நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் என்பதை கூறுவதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை அமைந்ததுமே அந்த சட்டத்தின் அம்சம் ரத்தாகி விடும்.

    மறுபடியும் சட்டமன்றம் இல்லாத ஒரு நிலை வந்தால் மட்டுமே 239 ஏ. அம்சங்கள் அமலுக்கு வரும்.



    கவர்னர் கிரண்பேடி இதை சரியாக தெரிந்து கொள்ளாமல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சட்டசபையிலும் இது சம்பந்தமான விவாதம் இன்று வந்தது.

    அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா..? இல்லையா என குழப்பம் நிலவுவதாகவும் இதற்கு முறையான பதில் அளிக்குமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்து நாராயணசாமி கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் அரசியல் சாசன அமர்வு கொண்ட அனைத்திற்கும் பொருந்தும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் உண்டு.

    ஒருசிலர் இல்லாத அதிகாரத்தை தனக்கு உள்ளது என்று கூறுவதை உச்சநீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    இதனிடையே காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன் குறுக்கிட்டு, புதுவை கவர்னருக்கு அதிகாரம் என்ன என்பது தொடர்பான தீர்ப்பின் வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் வருகிறது. அதில் உண்மை தெரிந்துவிடும் என கூறினார். #Kiranbedi #Narayanasamy
    பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். #governorkiranbedi #CMNarayanasamy
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    அரசு மீது கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டுவதும், புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாக உள்ளார் என்றும் நாராயணசாமியும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

    ஒரு சில சமயங்களில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைவதும் அதன் பிறகு சமாதானமாகி இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பது என வழக்கமாக இருந்து வருகிறது.



    கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்ற சில நாட்களில் 2 ஆண்டுகள் மட்டுமே புதுவையில் பணிபுரிவேன் என்றும் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட புதுவையில் இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது புதுவையில் தொடர்ந்து கவர்னராக பணியாற்றுவேன் என்று கிரண்பேடி தெரிவித்தார்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கவர்னர் கிரண்பேடி புதுவையில் இருந்து பெட்டி படுக்கையுடன் வெளியேற வேண்டும் என்றும், கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநிலம் ஒரு சதவீதம் கூட வளர்ச்சி அடையவில்லை என்றும் நாராயணசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையாக தாக்கி பேசினார்.

    மேலும் கவர்னர் கிரண்பேடியின் அழைப்பு விடுத்த விழாவில் தன்மானமுள்ளவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் நாராயணசாமி அறிவித்தார்.

    அதன்படி நேற்று மாலை கவர்னர் கிரண்பேடி அழைத்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மை பணியை சைக்கிளில் சென்று பார்வையிடுவது வழக்கம்.

    ஆனால், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாசில் இருந்து திடீரென சைக்கிளில் புறப்பட்டார். துப்புரவு பணிகளை பார்வையிட்டபடி வந்த அவர் வழியில் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    அதன் பின்னர் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கு கவர்னர் கிரண்பேடி வந்தார். கவர்னரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் திகைத்து போனார்கள்.

    இது பற்றி வீட்டு மாடியில் இருந்த நாராயணசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது நாராயணசாமி குளித்து கொண்டு இருந்தார்.

    அதுவரை கவர்னர் கிரண்பேடி வீட்டு வராண்டாவில் காத்து இருந்தார். சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு நாராயணசாமி வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

    இதையடுத்து நாளை பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பதிலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து 2 ஆண்டு பணி நிறைவடைந்ததையொடடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

    இதன் பின்னர் கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டுக்கு சென்றார். அங்கு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தார்.

    அதே போல் சபாநாயகர் வைத்திலிங்கமும் பதிலுக்கு கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  #governorkiranbedi #CMNarayanasamy

    ×